Mahindra BE 6e & XEV 9e eSUV: Complete Walkaround and Features Explained in தமிழ...
ஃபென்ஜால் புயலை எதிா்கொள்ள 24 மணி நேரமும் தயாா்: மேயர் பிரியா
ஃபென்ஜால் புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
வார்டுக்கு 10 பேர் வீதம் 28 ஆயிரம் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் எனவும் மாநகராட்சி மேயர் பிரியா பேட்டி..
ஒரு காலத்தில் பெண் குழந்தைகள் பிறந்தால் கொல்லக்கூடிய நிலைமை இருந்தது தற்பொழுது அரசின் நலத்திட்டங்களால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்து உள்ளது என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேட்டி
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி,சென்னை கிழக்கு மாவட்டம் எழும்பூர் தெற்கு பகுதி திமுக இளைஞரணி சார்பில் வருங்காலம் காப்பது வைப்பு நிதி - மழலைகளுக்கு வழங்குகிறார் உதயநிதி என்ற தலைப்பில் சென்னை எழும்பூர், பாந்தியன் சாலையில் அமைந்துள்ள எழும்பூர் அரசு தாய்-சேய் நல மருத்துவமனையில் - மழலைகளுக்கு வைப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில்,அமைச்சர்கள் சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ் மழலைகளுக்கு வைப்பு நிதியினை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதன்கிழமை பிறந்த 16 ஆண் குழந்தைகள்,21 பெண் குழந்தைகள் என 37 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் மேயர் பிரியா பேசியதாவது:
சென்னைக்கு மழை இருக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள், முதல்வர் புயல், கனமழையாக இருந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்க அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் கடந்த மாதமே தாழ்வான பகுதிகளில் நூறு குதிரை திறன் கொண்ட 110 மோட்டார்கள் பொருத்தப்பட்டிருந்தன. இப்போது கூடுதலாக 60 மோட்டார்கள் கொள்முதல் செய்யப்பட்டு, கூடுதலாக சில பகுதிகளுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
எல்லா கால்வாய்களிலும் தூர்வாரக் கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகாயத்தாமரை மற்றும் இதர குப்பைகளை நீக்குவதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரக்கூடிய மழைக்கு முன்னெச்சரிக்கையாக மாநகராட்சி தயார் நிலையில் இருக்கிறது.
28 ஆயிரம் பணியாளர்கள் மாநகராட்சிக்காக பணி செய்து வருகிறார்கள்.இந்த மழைக்கு மட்டும் வார்டுக்கு 10 பேர் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள்.அவர்கள்
உணவு விநியோகம் மற்றும் மக்களை மீட்கக் கூடிய பணிகளில் ஈடுபடுவார்கள். இது மட்டுமின்றி அக்டோபர் மாதமே தன்னார்வலர்களையும் மாநகராட்சியுடன் இணைத்துள்ளோம். அவர்களும் தொடர்ச்சியாக மாநகராட்சியுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியதாவது,
துணை முதல்வர் பிறந்த நாளையொட்டி 5 குழந்தைகளுக்கு வைப்பு நிதியும், 37 குழந்தைகளுக்கு மோதிரமும் வழங்கப்பட்டது. ரூ.60 ஆயிரம் மதிப்பில் வைப்பு நிதி போடப்பட்டுள்ளது. 21 ஆவது வயதில் ரூ.20 லட்சம் கிடைக்கும் வகையில் அவர்களுக்கு வைப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் பெண் குழந்தைகள் பிறந்தால் கொல்லக்கூடிய நிலைமை இருந்தது. தற்போது பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. கல்வி,தொழில்துறை என அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான ஹெல்ப்லைன் சமூக நலத்துறையில் உள்ளது என கூறினார்.