அதிகாரத்தை அனுபவிப்பதைத் தவிர ராகுல் காந்தி குடும்பம் எதையும் செய்யவில்லை: சிராக் பஸ்வான்
காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க் கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் விமர்சித்துள்ளார்.
மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில், "சுதந்திரத்திற்குப் பிறகு அதிகமான காலம் ஆட்சியில் இருந்த கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இருந்துகொண்டு இப்படிப்பட்ட வாக்குறுதிகளை அவர் அளிப்பது எனக்குப் புரியவில்லை. இத்தனை ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள்? பத்து ஆண்டுகளுக்கு முன்பும் நீங்கள் ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது நீங்கள் சாதி கணக்கெடுப்பை நடத்தியிருக்கலாமே? எதிர்க்கட்சியாக மாறியவுடன் அவர்களின் மொழி மாறிவிட்டது.
ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிகாரத்தின் சலுகைகளை அனுபவிப்பதைத் தவிர எதையும் செய்யவில்லை” என விமர்சித்தார்.
இதையும் படிக்க | காங்கிரஸ் மீது பிரதமர் மோடி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
இன்று மத்திய அரசை விமர்சித்துப் பேசிய ராகுல் காந்தி, “என் முதல் உரையில், மகாபாரதம் மற்றும் குருட்சேத்திரப் போர் தொடர்பான கருத்தை தெரிவித்தேன். இந்தியாவில் இன்று ஒரு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் பக்கம் (எதிர்க் கட்சியில்) அரசியலமைப்பின் கருத்தை பாதுகாக்கும் நபர்கள் உள்ளனர். நாங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும், இந்தக் கொள்கைகளைக் காப்பாற்றியவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். தமிழ்நாட்டில் பெரியார், கர்நாடகாவில் பசவண்ணா, மகாராஷ்டிராவில் புலே, அம்பேத்கர் மற்றும் குஜராத்தில் மகாத்மா காந்தி.
இதையும் படிக்க | இந்திய விண்வெளிப் பொருளாதாரம் அடுத்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு உயரும்!
நீங்கள் (ஆளும் கட்சியினர்) இந்த நபர்களைத் தயக்கத்துடன் புகழ்கிறீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் இந்தியா முந்தைய காலத்தில் எப்படி இருந்ததோ அப்படியே இருக்க விரும்புகிறீர்கள்” என்று பேசியிருந்தார்.
மேலும், "உங்களை அரசியல் சட்டமே பாதுகாக்கிறது. பாஜக தொடர்ந்து அரசியல் சட்டத்தை தாக்குகிறது என ஒவ்வொரு ஏழை மனிதரிடமும் நாங்கள் சொல்ல விரும்புகிறோம். நான் சாதிவாரி கணக்கெடுப்பை நடைமுறைப்படுத்துவோம் மக்களவையில் வாக்குறுதி அளித்துள்ளேன். அதன் பிறகு இந்தியா ஒரு புதிய வளர்ச்சிபெறும்” என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தியை சிராக் பஸ்வான் விமர்சித்து கருத்து தெரிவித்தார்.