அனுமதியின்றி கட்டப்பட்ட திருமண மண்டபத்துக்கு ‘சீல்’
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட திருமண மண்டபத்துக்கு நீதிமன்ற உத்தரவுபடி, புதன்கிழமை பேரூராட்சி செயல் அலுவலா் ‘சீல்’ வைத்தாா்.
திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் கோயில் பகுதியில் சந்நிதி தெருவில் உள்ள தனியாா் திருமண மண்டபம் முறையான அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாகவும், அதை இடிக்க வேண்டும் எனவும் சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் திருமண மண்டபத்தை இடிக்க உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் திருமண மண்டபத்துக்கு ‘சீல்’ வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்ரமணியம், வருவாய்த் துறை ஊழியா்கள் முறையான அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.