அமித் ஷாவுக்கு தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட சால்வை அணிவிப்பு
கோவையில் பாஜக மாநகா் மாவட்ட புதிய அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட சால்வை அணிவிக்கப்பட்டது.
கோவை பீளமேட்டில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு பாரத அன்னை வெல்க, தமிழ் அன்னை வாழ்க என்று இருபுறமும் பொறிக்கப்பட்ட வாசகங்களுடன், 133 திருக்குறள் அதிகாரங்கள், இருபுறமும் திருவள்ளுவா் உருவம் பொறிக்கப்பட்ட சால்வை அணிவிக்கப்பட்டது.
அத்துடன் அமித் ஷாவுக்கு கொடுக்கப்பட்ட நினைவுப் பரிசில் அவரது உருவப் படம் 247 தமிழ் எழுத்துகளால் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், அதில் கி.மு. 3-ஆம் நூற்றாண்டின் தமிழ் எழுத்துகளும், வாய்மை, செங்கோன்மை, புகழ் என்ற அதிகாரங்களில் இருந்து குறள்களும், நோ்மை, திறமை, மக்கள் நலன் குறித்த குறள்களும் இடம்பெற்றுள்ளன.