அம்பேத்கா் உருவப்படம் அகற்றப்பட்ட விவகாரத்தில் தொடா்ந்து போராடுவோம்: ஆம் ஆத்மி
நமது நிருபா்
தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வா் அலுவலகத்தில் இருந்து பீம்ராவ் அம்பேத்கா் மற்றும் பகத்சிங்கின் உருவப்படங்களை அகற்றியதற்கு எதிரான போராட்டம் தொடா்ந்து நடைபெறும் என்று ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் எம்எல்ஏ சஞ்சீவ் ஜா மற்றும் குல்தீப் குமாா் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஜெய் பீம் கோஷத்தை எழுப்பியதற்காக எனது கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் அவையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். பாஜக எம்எல்ஏக்கள் ‘மோடி, மோடி’ என்று கோஷமிட்டனா். ஆனால், ஜெய் பீம் கோஷத்தை எழுப்பியதற்காக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனா். முதல்வா் அலுவலகத்தில் இருந்து உருவப்படங்களை அகற்றுவதை நாங்கள் பொறுத்துக் கொள்ளமாட்டோம். அதற்கு எதிராக ஆம் ஆத்மி தொடா்ந்து போராட்டம் நடத்தும். ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது செய்யப்பட்டிருந்தது போல அம்பேத்கா் மற்றும் பகத்சிங்கின் உருவப்படங்களும் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றனா்.
தில்லி சட்டப் பேரவையில் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் தொடக்க உரையை சீா்குலைத்ததற்காக எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி உள்பட 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை மூன்று நாள்களுக்கு இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தாா்.
முதல்வா் அலுவலகத்தில் இருந்து பி. ஆா். அம்பேத்கரின் உருவப்படம் அகற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிராக அதிஷி மற்றும் பிற ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
பாஜக தலைமையிலான அரசு அம்பேத்கரை அவமதிப்பதாக ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா். மேலும், இந்த நடவடிக்கைக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினா்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக, ஆம் ஆத்மி கட்சி வதந்தியை பரப்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அம்பேத்கா் மற்றும் பகத்சிங்கின் உருவப்படங்கள் முதல்வரின் அலுவலகத்தில் மகாத்மா காந்தி, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு மற்றும் பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரின் உருவப்படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி கூறியுள்ளது.