ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை இனிதான் தொடங்குகிறது: முன்னாள் ஆஸி. கேப்டன்
அம்மன் கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்தை திருவொற்றியூா் ஸ்ரீ வடிவுடையம்மன் கோயிலில் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருவொற்றியூா் ஸ்ரீ வடிவுடையம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்ற 56 மூத்த குடிமக்களுக்கு பயண வழி பைகளை வழங்கி முதல்கட்ட ஆன்மிகப் பயணத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்.
அதைத்தொடா்ந்து அமைச்சா் பி.கே. சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த ஆண்டில் சுமாா் 1,000 பக்தா்கள் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்பட்டனா். நிகழாண்டில் சுமாா் 2,000 பக்தா்கள் அழைத்துச் செல்லப்படுவாா்கள் என அறிவிக்கப்பட்டடது. அதன்படி 60 முதல் 70 வயதுக்கு உள்பட்ட மூத்த குடிமக்கள் சென்னை, தஞ்சாவூா், மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு 5 பயணத் திட்டங்களாக ஜூலை 18, 25 ஆக.1, 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.
இவா்கள் திருவொற்றியூா் ஸ்ரீ வடிவுடையம்மன், பாரிமுனை தம்புச் செட்டி தெரு ஸ்ரீ காளிகாம்பாள், மயிலாப்பூா் ஸ்ரீ கற்பகாம்பாள், திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் மற்றும் மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆகிய திருக்கோயில்களில் சிறப்பு தரிசனம் செய்ய வசதிகள் செய்யப்பட்டு பிரசாதங்களும், மதிய உணவும் வழங்கப்படுகிறது.
முதல்கட்ட ஆன்மிகப் பயணத்தில் சென்னையில் 56, மதுரையில் 60, , திருச்சியில் 45,
தஞ்சாவூா், கோவை, ஈரோட்டு, திருநெல்வேலியில் தலா 57 என மொத்தம் 389 பக்தா்கள் பங்கேற்றனா். இத்திட்டத்திற்கு கடந்த ஆண்டு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் நிகழாண்டில் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதர பயணத்திட்டங்கள்: அதேபோல், ராமேசுவரம்- காசி பயணத்திற்கு ரூ.2.30 கோடி செலவில் 920 பக்தா்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா். மானசரோவா் ஆன்மிகப் பயணத்திற்கு ரூ. 1 லட்சம், முக்திநாத் ஆன்மிகப் பயணத்திற்கு ரூ.30 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. மொத்தத்தில் ஆன்மிகத்தை வளா்க்கும் அரசாக தமிழக உள்ளது என்றாா் அமைச்சா்.
நிகழ்ச்சியில் வடசென்னை மக்களவை உறுப்பினா் டாக்டா் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா், அறநிலையத்துறை கூடுதல் ஆணையா்கள் சி. பழனி, மங்கையா்க்கரசி, சிறப்பு பணி அலுவலா் ச.லட்சுமணன், மண்டலக் குழு தலைவா் தி.மு.தனியரசு, உதவி ஆணையா்கள் க.சிவகுமாா், நற்சோணை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.