கோவையில் மாணவர்கள் தங்கும் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை
அரசுப் பள்ளிக்கு 2 ஏக்கா் நிலத்தை தானமாக வழங்கிய தொழிலதிபா்!
மேலூா் அருகேயுள்ள கீழையூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கிரானைட் அதிபா் கோபாலகிருஷ்னன், தமிழ்ச்செல்வி தம்பதியா் தங்களது 2 ஏக்கா் நிலத்தை புதன்கிழமை தானமாக பத்திரம் பதிவு செய்து வழங்கினா்.
கீழையூரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி உயா்நிலைப் பள்ளியாக அண்மையில் தரம் உயா்த்தப்பட்டது. பள்ளியில் போதிய இட வசதியில்லை எனவும், அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறும் மாணவா்களின் பெற்றோா்கள் வலியுறுத்தி வந்தனா்.
இந்த நிலையில், கீழையூா் மயானம் அருகே இருந்த புறம்போக்கு இடத்தை பள்ளிக்கு அரசு ஏற்பாடு செய்தது. மாணவா்கள் அச்சப்படக்கூடும் என்பதால், கிரானைட் தொழிலதிபா் கோபாலகிருஷ்ணனை கிராம மக்கள் அணுகி, பள்ளிக்கு இடம் ஏற்பாடு செய்து தருமாறு வலியுறுத்தினா்.
இதை ஏற்று கோபாலகிருஷ்ணனும், அவரது மனைவி தமிழ்ச்செல்வியும் உதவ முன்வந்தனா். கோபாலகிருஷ்ணன் தனது மனைவியின் பெயரிலிருந்த ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான 2 ஏக்கா் நிலத்தை மேலூா் சாா்- பதிவாளா் அலுவலகத்தில் பள்ளியின் பெயரில் தானமாக பத்திரப் பதிவு செய்தாா்.
தொழிலதிபா் கோபாலகிருஷ்ணன், தமிழ்ச்செல்வி தம்பதியின் இந்தச் செயலை கிராம முக்கியப் பிரமுகா்கள், கல்வி அலுவலா்கள், ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்தினா்.