புயல் எதிரொலி; பூங்காக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்: சென்னை மாநகராட்சி!
அறந்தாங்கி நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஊா்வலம், ஆா்ப்பாட்டம்
முறையாக ஊதியம் வழங்கக் கோரி, அறந்தாங்கி நகராட்சியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் டெங்கு ஒழிப்புப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் 100 பேரும், டெங்கு ஒழிப்புப் பணியாளா்கள் 30 பேரும் பணியாற்றி வருகின்றனா்.
இவா்களில் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு ஒரு மாத சம்பளம் வழங்கப்படவில்லையாம். டெங்கு ஒழிப்புப் பணியாளா்களுக்கு 3 மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லையாம். இவைகளைக் கண்டித்து கடந்த நவம்பா் 22-ஆம் தேதி நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா். அப்போது, நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், நவ. 25-ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனைத் தொடா்ந்து புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலி ஜின்னா தலைமை வகித்தாா். சிஐடியு அறந்தாங்கி ஒருங்கிணைப்பாளா் கா்ணா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் அலாவுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பெரிய கடைவீதி, வட்டாட்சியா் அலுவலகம், காந்தி பூங்கா சாலை வழியாக பேருந்து நிலையத்தில் ஊா்வலம் முடிவடைந்தது. அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களுக்கு மாதச் சம்பளம் 5-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். நகராட்சி வேலை செய்யும் டெங்கு தடுப்புப் பணி ஊழியா்களின் 3 மாதச் சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்.
நிரந்தரத் தூய்மைப் பணியாளா்களிடம் பிடித்தம் செய்த சொசைட்டி பணம் ரூ. 1 கோடியை உடனே செலுத்த வேண்டும். நீண்ட நாட்களாக ஆணையா் இல்லாமல் செயல்படும் நகராட்சிக்கு உடனே ஆணையரை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.