அல்லு அர்ஜுன் கைது: மத்திய அமைச்சர்கள் கண்டனம்!
நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், தெலங்கானா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அல்லு அர்ஜுன் கைது நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பதாவது, “கலைத்துறைக்கு காங்கிரஸ் அரசு உரிய மரியாதை அளிப்பதில்லை. அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டிக்கும் நடவடிக்கை மூலம், இது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட அசம்பாவிதம், மாநில மற்றும் உள்ளூர் நிர்வாகத்தால் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாததன் விளைவே... இப்போது வேறொருவர் மீது பழி சுமத்துவதற்காக, பொதுவெளியில் கவனத்தை ஈர்க்கும் விதத்திலான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.”
“இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்ய வேண்டும். திரைத்துறையினர் மீது தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்பதற்கு பதிலாக, தெலங்கானா அரசு சம்பவத்தன்று பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகக் கையாளாமல் இருந்தவர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,
தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டில் இதே பாணியிலான நடவடிக்கைகள் தொடருவது கவலையளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.
அதேபோல, மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் ‘பாரத் ராஷ்டிரிய சமிதி(பிஆர்எஸ்)’ கட்சியின் செயல்தலைவரும் எம்.எல்.ஏ.வுமான கே.டி. ராம ராவ் உள்பட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.