``அவரவர் வரம்புக்குள் இருந்தால் நல்லது'' - தனது முன்னாள் IPL அணி உரிமையாளர் மீது...
``அழியும் நிலையில் பொய்க்கால் குதிரை ஆட்டம்'' - மீட்டெடுக்க களமிறங்கிய அரசு; இளைஞர்கள் ஆர்வம்!
தமிழக அரசு, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) சார்பில் அழிந்து வரக்கூடிய நிலையில் உள்ள பழமையான பாரம்பரிய கலை மற்றும் கலைப்பொருட்களை மீட்டெடுக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, ஊக்கப்படுத்தி வருகிறது.
தஞ்சாவூரின் பழமையான பாரம்பரிய கலைகளில் ஒன்று பொய்க்கால் குதிரை நடனம். பொய்க்கால் குதிரை நடனம் ஆடும் பல குடும்பங்கள் தஞ்சாவூரில் இருந்தனர்.
அவர்கள் உலகின் பல நாடுகளுக்கு சென்று பொய்க்கால் குதிரை நடன நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர். ஆனால் இன்று சிலர் மட்டுமே பொய்க்கால் குதிரை நடனம் ஆடுகின்றனர்.

அத்துடன் பொய்க்கால் குதிரை செய்பவர்களும் சிலர் மட்டுமே உள்ளனர். இப்படியே போனால் பொய்க்கால் குதிரை நடனம் அழிந்து போகும். வரும் தலைமுறையினருக்கும் இப்படி ஒரு கலை இருந்தே தெரியாமல் போகும் நிலை ஏற்படும்.
இதை அறிந்த தமிழக அரசு, பொய்க்கால் குதிரை நடனம் அழியாமல் காக்கவும், இளம் தலைமுறையினருக்கு அக்கலையை கொண்டு சேர்க்கவும் அக்கறையுடன் நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் பூம்புகார் விற்பனை நிலையத்தில் பொய்க்கால் குதிரை செயல் திறன் பயிற்சி மற்றும் பொய்க்கால் குதிரை நடனப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து 60 நாட்கள் இந்த பயிற்சி நடைபெற்றது. கலைகளில் ஆர்வமுடைய இளைய தலைமுறையைச் சேர்ந்த 20 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் பங்கேற்றனர். தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை செயல்திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.
பொய்க்கால் குதிரை பொம்மை செய்வது மற்றும் இசைக்கேற்ப லாவகமாக பொய்க்கால் குதிரை பொம்மையை மாட்டிக்கொண்டு ஆடுவது குறித்தும் செயல்திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் சிறந்து விளங்கி வரும் சிவாஜிராவும் ஜீவாராவும், பழமையான முறையில் பொய்க்கால் குதிரை பொம்மை செய்வதற்கும், நடனம் ஆடவும் பயிற்சி அளித்தனர்.
20 நபர்கள் பொய்க்கால் குதிரை கலையை கற்றுத் தேர்ந்தனர். இதன் மூலம் இக்கலை அழியாமல் பாதுகைக்கப்பட்டுள்ளது.
வரும் தலைமுறைக்கு சென்று சேரும். இதற்காக ஒவ்வொரு நபருக்கும் செயல்திறன் பயிற்சிக்கு தேவையான ரூ.10,000 மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மேலும், செயல்திறன் பயிற்சியில் கலந்து கொண்டு கலையை கற்றுக்கொண்டவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக ஊக்கத்தொகையுடன் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலைய நிர்வாகத்தினர் இதற்கான ஒருங்கிணைப்பை செய்தனர். இதே போல், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மற்றும் மதுரையில் கடம் இசைக் கருவிக்கான செயல்திறன் பயிற்சியும் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் மற்றும் பயிற்சியை நடத்தியவர்கள் பாரம்பர்ய கலையை அழியாமல் காக்க நடவடிக்கை எடுத்த அரசுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், இதுபோன்ற பயிற்சிகளை தொடர்ந்தால் இன்னும் பலர் கற்றுக்கொள்ள வாய்ப்பு அமையும் என்றனர்.






















