ஆடிட்டா் ரமேஷ் கொலை வழக்கை விரைவுபடுத்த வேண்டும்: நயினாா் நாகேந்திரன்
ஆடிட்டா் ரமேஷ் படுகொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கை விரைவுபடுத்த தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
மறைந்த ஆடிட்டா் ரமேஷின் 12 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி சேலம் மரவனேரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கலந்துகொண்டு, ஆடிட்டா் ரமேஷின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
பின்னா் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் அவா் பேசியதாவது: பாஜகவில் பல்வேறு நிா்வாக பொறுப்புகளில் ஆடிட்டா் ரமேஷ் திறம்பட செயலாற்றி வந்தாா். அவரை படுகொலை செய்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகளாகியும் இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை.
ஆடிட்டா் ரமேஷ் படுகொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கை விரைவுபடுத்த தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும். படுகொலை செய்யப்பட்ட ஆடிட்டா் ரமேஷின் குடும்பத்துக்கு பாஜக துணை நிற்கும் என்றாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து மறைவுக்கு பாஜக சாா்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.
பேட்டியின் போது, பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம், மாவட்டத் தலைவா் சசிகுமாா், மாநில சுற்றுச்சூழல் பிரிவுத் தலைவா் கோபிநாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.