ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல: இபிஎஸ்
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல என்றும் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியுள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்‘ என்ற முழக்கத்தோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, திருத்துறைப்பூண்டியில் நேற்று(ஜூலை 19) பிரசாரம் மேற்கொண்டார்.
தஞ்சாவூர் - கோடியக்கரை சாலையில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் இபிஎஸ் பேசியதாவது:
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல, அதிமுக அதிக இடங்களில் வெற்றிப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களுக்கு கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும், வேண்டாம் என்றால் வேண்டாம். எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.
உங்களைப்போல(ஸ்டாலின்), வாரிசுக்காக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை, மக்கள் விருப்பத்திற்காக மட்டுமே ஆட்சிக்கு வர நினைக்கிறோம். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும் ஓரணியில் திரள வேண்டும்.
திமுக ஒரு ஊழல் கட்சி, ஊழல் அரசாங்கம் அதை அகற்ற வேண்டும் என்று பாஜக கருதுகிறது. அந்த நிலைப்பாடோடு எங்களுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது.
இன்னும் சில கட்சிகள் எங்களுடன் இணையவுள்ளன, சரியாண நேரத்தில் உங்களுக்கு மரண அடி கொடுப்போம். 200 தொகுதிகளில் வெற்றிப் பெறுவதுதான் கனவு, ஆனால் நிஜத்தில் 210 தொகுதிகளில் வெற்றிப் பெருவோம்” என்று பேசினார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!