கேப்டன் தமிழ் செல்வம்: ஒரே தொகுதி... மும்பையில் 3வது முறையாக வெற்றி பெற்ற தமிழர்...
ஆதரவற்றோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்... திருநெல்வேலியில் நெகிழ்ச்சி..!
மனிதநேயத்தை உணர்த்தும் வகையில் "மனிதம்" மாணவர் சேவை அமைப்பின் கீழ் அனைத்து வாரமும் ஞாயிற்றுக் கிழமை அன்று ஏழை எளியவர்களுக்கு மாணவர்கள் சேர்ந்து உணவு அளிப்பது வழக்கமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தீபாவளியை முன்னிட்டு இந்த அமைப்பின் கீழ் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவர்கள், திருநெல்வேலி டவுண் மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் 25 பேருக்குப் புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கினர்.
தீபாவளிக்கு அவர்கள் வீட்டில் எப்படி புத்தாடை அணிந்து இனிப்புகளுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவார்களோ, அதே போல ஆதரவற்றோர்களுடன் இணைந்து இந்த தீபாவளியை அவர்கள் கொண்டாடினார்கள்.
தங்களால் இயன்ற பணம் அளித்த மாணவர்களுடன் கல்லூரி நிர்வாகமும் இணைந்து இந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடியது. கல்லூரியின் முதல்வர் மாணவர்களுடன் நேரில் சென்று முதியவர்களுக்கு புத்தாடைகள் இனிப்புகள் வழங்கினார்.
இது குறித்து ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் முதியவர்கள் பேசும்போது, "இந்த இல்லத்தில் நாங்க ஆண்கள், பெண்கள் என மொத்தம் 25 பேர் இருக்கோம். நாங்க எல்லாருமே வயதானவர்கள் தான். எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் கிடைக்காத சந்தோசம் மாணவர்கள் செய்த இந்த விசயத்துனால எங்களுக்கு கிடைத்தது. இந்த பசங்க , பொண்ணுங்க எல்லாரும் எங்க பேரன், பேத்தி மாதிரி தான். நாங்க எல்லாருமே ரொம்ப சந்தோசமா இருக்கோம். இப்போ இருக்கிற காலத்துல அம்மா அப்பாவ ஒரு வயதுக்கு அப்பறம் பாரமா தான் சிலர் நினைக்கிறாங்க.
பெற்றோர், நண்பர்களுடன் இந்த பண்டிகையை கொண்டாடுகிற இந்த நேரத்தில, இந்த கல்லூரியிருந்து மாணவர்கள் எல்லாரும் சேர்ந்து இங்க இருக்கிற எல்லாருக்கும் புத்தாடை இனிப்புகள் எல்லாம் வந்து வாங்கி குடுத்துருக்காங்க.
மொத்தமா வாங்கி மட்டும் அனுப்பாம கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் எல்லாரும் நேரில் வந்து எங்க கூட இந்த தீபாவளிய கொண்டாடினாங்க. எங்க எல்லாருக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கு" என்றனர்.