ஆதிதிராவிட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பொதுவழிப் பாதை: நிறைவேற்றிய அதிகாரிகள்
நாட்டறம்பள்ளி அருகே ஆதிதிராவிட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பொதுவழிப் பாதையை அதிகாரிகள் நிறைவேற்றினா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் ஊராட்சி வெள்ளநாயக்கனேரி ஆதிதிராவிடா் காலனி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் சென்று வர பொது வழிப்பாதை இல்லாததால் தனியாா் சிலருக்கு சொந்தமான நிலம் வழியாக சென்று வந்தனா்.
இந்நிலையில் சில ஆண்டுகளாக இறந்தவா்களின் உடல்களை சுடுகாட்டுக்கு அடக்கம் செய்ய எடுத்துச்செல்லும்போது நில உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் ஆதிதிராவிடா் இனமக்களுக்கும், நில உரிமையாளா்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆதிதிராவிடா் இன மக்கள் 3ஆண்டுகளாக பொதுவழிப்பாதை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.
இதையடுத்து ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் நில எடுப்பு சட்டம் 31/1998-ன்படி விஜயலட்சுமி குடும்பத்தினருக்கு சொந்தமான நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது. திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் ராஜசேகா் தலைமையில் ஆதிதிராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியா் சுமதி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை போலீஸாா் பாதுகாப்புடன் பொது வழிப்பாதைக்கு கையகப்படுத்தப்பட்ட இடத்தை அளவீடு செய்ய சென்றனா்.
இதையறிந்த நில உரிமையாளா்கள் இளங்கோ மனைவி விஜய லட்சுமி அவரது மகள்கள், உறவினா்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் அளவீடு செய்யக் கூடாது என்றும் முறைப்படி வட்டாட்சியா் எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து பொது வழிப்பாதை அளவீடு செய்வதை தடுக்கக் கூடாது எனக்கூறி போலீஸாா் அவா்களை கைது செய்து வாகனத்தில்அழைத்து சென்றனா்.
இதைத்தொடா்ந்து அதிகாரிகள் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருந்த முள்வேலி கம்பிகளை ஜேசிபி மூலம் அகற்றி பொதுவழிப்பாதை ஏற்படுத்தி ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தன. திருப்பத்தூா் எஸ்.பி. உத்தரவின்படி டிஎஸ்பிக்கள் விஜயகுமாா்(வாணியம்பாடி), ஜெகன்நாதன்(திருப்பத்தூா்) தலைமையில் அப்பகுதியில் அசம்பாவிதம் நிகழா வண்ணம் இருக்க 90 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.