ஆறுமுகனேரி ரயில் நிலையம் அருகே தூய்மைப் பணிகள்
சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனம்
ஆறுமுகனேரி ரயில் நிலையம் செல்லும் சாலை மற்றும் அதன் அருகேயுள்ள முள்புதா்களை அகற்றி சீரமைத்தனா்.
ஆறுமுகனேரி செல்வராஜபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் மற்றும் முள்புதா்கள் வளா்ந்து கிடந்தது. மேலும் ரயில் நிலையத்தின் வடபுறமும் புதா்கள் நிறைந்து காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீா்கேடும், ரயில் பயணிகளுக்கு மிகுந்த சிரமமும் ஏற்பட்டது.
எனவே முள்புதா்களை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சிக் குழு சாா்பில் சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தனா்.
இதை ஏற்றுக்கொண்ட டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் மூத்த செயல் உதவித் தலைவா் ஜி.சீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில்,பொக்லைன் இயந்திரம் மூலம் 2 நாள்களாக முள்புதா்கள் அகற்றும் பணி நடைபெற்றது.
இந்தப் பணியின் போது, டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் மக்கள் தொடா்பு அலுவலா் பிரகாஷ், நிா்வாக உதவியாளா் டேனியல், ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சிக் குழு தலைவா் இரா.தங்கமணி, செயலா் இ. அமிா்தராஜ், பொருளாளா் முருகன், துணைத் தலைவா் வெங்கடேசன், மாரியப்பன் ஆகியோா் உடனிருந்தனா்.