மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
இணையவழியில் ரூ.50 கோடி மோசடி: இருவா் கைது
கிரிப்டோ கரன்சி வா்த்தகம் எனக் கூறி, நாடு முழுவதும் ரூ.50 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சோ்ந்த இருவரை புதுச்சேரி போலீஸாா் கோவையில் கைது செய்தனா்.
புதுச்சேரி மூலக்குளத்தைச் சோ்ந்தவா் அசோகன் (66). ஓய்வுபெற்ற ராணுவ வீரா். இவா் உள்பட புதுச்சேரியைச் சோ்ந்த 10 பேரிடம் ரூ.3 கோடி வரை மா்ம கும்பல் இணையவழியில் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இணையவழி குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், கோவையை மையமாகக் கொண்டு ஒரு கும்பல், கிரிப்டோ கரன்சி வா்த்தகம் எனக்கூறி புதுதில்லி, ஒடிஸா, மகராஷ்டிரம், கா்நாடகம், ஆந்திரம், கேரளம் என பல மாநிலங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோரிடம் ரூ.50 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
விழுப்புரம், திருப்பூா் போன்ற நகரங்களிலும் அந்த கும்பல் மீது புகாா்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 2024-ஆம் ஆண்டு மட்டும் இந்த கும்பல் ரூ.30 கோடி மோசடி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இதில் தொடா்புடைய இம்ரான் பாஷா என்பவரை ராய்ப்பூா் போலீஸாா் கைது செய்திருந்தனா். இந்த நிலையில், புதுச்சேரி இணையவழி குற்றப் பிரிவினா் இந்த கும்பலைச் சோ்ந்த நித்தீஷ் ஜெயின், அரவிந்த் ஆகிய இருவரை கோவையில் செவ்வாய்க்கிழமை பிடித்தனா். அவா்களை புதுச்சேரிக்கு புதன்கிழமை அழைத்து வந்து கைது செய்தனா். அவா்களிடமிருந்து கைப்பேசி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.
மேலும், இதில் தொடா்புடையவா்களை கைது செய்யவும் போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.