"நடிகைகள் தங்களுக்கான எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்" - 'பெத்தி' விவகாரம் குற...
இந்தியாக் கூட்டணி: ``பாஜக-வுடன் நாங்கள் கூட்டணியா?" - காங்கிரஸை உலுக்கும் CPM-ன் சரமாரி கேள்விகள்
இந்தியாக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்து முடிந்திருக்கிறது. பிரதமர் மோடிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
அதேநேரம் விசிக தலைவர் திருமாவளவன் காங்கிரஸ் கட்சியின் மாநில அரசியலின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், சிபிஐஎம் கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ. பேபி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், ``கேரள சட்டமன்றத் தேர்தலின் போது, சிபிஐ(எம்) மற்றும் பா.ஜ.க இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமையால் திட்டமிட்ட முறையில் பிரசாரம் செய்யப்பட்டது.

மேலும், சிபிஐ(எம்) கட்சியின் மூத்த தலைவரும், அரசியல் தலைமைக்குழு (Polit Bureau) உறுப்பினரும், அப்போதைய முதலமைச்சருமான தோழர் பினராயி விஜயன் மோடியுடன் உடன்பாடு செய்துகொண்டுள்ளார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
'அப்படி இல்லை என்றால், அமலாக்கத்துறையால் (ED) அவர் ஏன் விசாரணை செய்யப்படவில்லை அல்லது கைது செய்யப்படவில்லை?' என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
இவை தேர்தல் பிரசாரத்தின் ஆவேசத்தில் தற்செயலாகக் கூறப்பட்ட கருத்துக்கள் அல்ல, மாறாக உங்களது அரசியல் பிரசாரத்தின் மையப்பகுதியாக இருந்தன. தேசியத் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் நீங்கள் என அனைவரும் இத்தகைய குற்றச்சாட்டுகளைத் தொடர்ச்சியாக முன்வைத்தீர்கள்.
பா.ஜ.க-வை அரசியல் ரீதியாக எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு பரந்த தளமாகவே 'இந்தியா' (INDIA) கூட்டணி உருவாக்கப்பட்டது. மற்ற மாநிலங்களில் தேர்தல் ரீதியாகப் போட்டியாளர்களாக இருக்கும் பல்வேறு சித்தாந்தங்கள் மற்றும் திட்டங்களைக் கொண்ட கட்சிகள், இந்த ஒரே நோக்கத்திற்காக மட்டுமே ஒன்று கூடினன.
ஜூன் 2023 பாட்னா கூட்டத்தில் 'இந்தியா' கூட்டணி தொடங்கப்பட்டதில் இருந்தே, சிபிஐ(எம்) இத்தகையதொரு ஒருங்கிணைந்த தளம் உருவாவதற்காக உண்மையோடு உழைத்துள்ளது.

ஆனால் விந்தையாக, இப்போது சிபிஐ(எம்) பா.ஜ.க-வுடன் உடன்பாடு வைத்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது எங்களால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாத ஒரு அவதூறு ஆகும். இது பா.ஜ.க-வுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒற்றுமையின் அடிப்படையையே தாக்குகிறது.
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வுக்கு எதிரான போராட்டத்தில் கேரளாவில் எங்களது நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தியாகம் செய்துள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
கேரளாவில் கடந்த பத்து ஆண்டுகால எல்டிஎஃப் (LDF) ஆட்சியில், மற்ற பல மாநிலங்களைப் போலன்றி, எந்தவிதமான மதக்கலவரங்களும் நடக்கவில்லை என்பதையும், இது மதச்சார்பின்மை மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் எங்களுக்கிருக்கும் அர்ப்பணிப்புக்குச் சான்றாக அமைகிறது என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.
லோக் சபாவின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அப்போதைய கேரள முதலமைச்சருக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார். இதை பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாடு என்று கூற முடியுமா அல்லது சக எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராகச் சட்டவிரோதமான தண்டனை நடவடிக்கையை எடுக்குமாறு மோடி அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பா?
இத்தகைய விஷயங்கள் தெளிவுபடுத்தப்படாவிட்டால், 'இந்தியா' கூட்டணியின் நோக்கமே கேள்விக்குறியாகிவிடும். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் என்ற முறையில், இத்தகைய சீர்குலைக்கும் நகர்வுகள் குறித்த சந்தேகங்களைப் போக்குவது நீங்களும் காங்கிரஸ் தலைமையும் எடுக்க வேண்டிய முடிவாகும்.

நேற்று கூட்டப்பட்டுள்ள கூட்டத்தின் பின்னணியில் இந்த விஷயத்தை எழுப்ப வேண்டிய அவசியத்தை நாங்கள் உணர்ந்தோம்.
இருப்பினும், மோடி அரசாங்கத்தின் சர்வாதிகார, வகுப்புவாத மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுக்க, 'இந்தியா' கூட்டணி மற்றும் இதர எதிர்க்கட்சிகளுடன் சிபிஐ(எம்) நாடாளுமன்றத்தில் முழுமையாக ஒத்துழைக்கும். அனைத்துத் தாக்குதல்கள் மற்றும் திரிபுகளையும் தாண்டி, இந்தப் பணியில் சிபிஐ(எம்) எப்போதும் பின்வாங்காது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


.jpeg)












