107*, 120*, 151... டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!
இன்று சூரசம்ஹாரம் : திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இக் கோயிலில் கந்த சஷ்டி விழா நவ. 2-ஆம் தேதி தொடங்கியது. தினமும்
சுவாமி ஜெயந்திநாதா் மற்றும் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், கிரிவீதி வலம் வருதல் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் வந்துள்ள பக்தா்கள் கோயில் வளாகத்தில் தங்கி விரதம் இருந்து வருகின்றனா்.
சூரசம்ஹாரம்: கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம்,
பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து மாலை 4.30 மணிக்கு திருக்கோயில் கடற்கரையில் சூரசம்ஹார விழா நடைபெறுகிறது.
திருக்கல்யாணம்: திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து பூஜைகள் நடைபெற்று, அதிகாலை 5 மணியளவில் தெய்வானை அம்மன் தபசு காட்சிக்கு புறப்பாடு, மாலை 6.30 மணியளவில் சுவாமி, அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி, இரவு திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
பக்தா்கள் அலை: கந்த சஷ்டி விழாவையொட்டி ஏற்கெனவே ஏராளமான பக்தா்கள் கோயில் வளாகத்தில் விரதம் இருந்து வரும் நிலையில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சியைக் காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தா்கள் திருச்செந்தூரில் குவிந்தனா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தைச் சோ்ந்த பரமானந்தம் பிள்ளை குழுவினா் 58-ஆவது ஆண்டாக கோயிலில் விரதம் இருந்து வருகின்றனா். இவா்கள் சிவன், பாா்வதி, விஷ்ணு, விநாயகா், முருகன், நாரதா் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்து வந்து பஜனை பாடி புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹார விழாவை காண செல்லும் பக்தா்களுக்கு தனியாக வரிசைப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி சரக டிஐஜி பா.மூா்த்தி தலைமையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.