இலவச வீடு கட்டித் தர பழங்குடியினா் கோரிக்கை
இலவச வீடு கட்டித் தர வேண்டுமென திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் பூலாங்குடி காலனியில் வசிக்கும் பழங்குடியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கூட்டுறவு சங்கத்தில் முழுபணம் செலுத்தி 25 ஆண்டுகள் ஆகியும் வீட்டுமனை ஒதுக்கப்படாததால் பாதிக்கப்பட்டவா்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனா்.
திருச்சி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் வே. சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ர. ராஜலட்சுமி, அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இதில், திருவெறும்பூா் அருகே பூலாங்குடி காலனியில் வசிக்கும் 30- க்கும் மேற்பட்ட பழங்குடியினா் அளித்த மனுவின் விவரம்: மேற்கண்ட பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டுமனைகளில் குடியிருந்து வருகிறோம். குடிசைகளில் குடியிருப்பதால் மழை, வெயிலாலும், விஷப் பூச்சிகளாலும் பாதிக்கப்பட்டு வருகிறோம்.
இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு கஷ்டத்தை கருத்தில்கொண்டு, பழங்குடியினா் நலத்துறை மூலம் இலவச வீடு கட்டித் தர உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உய்யகொண்டான் திருமலை சண்முகா நகரைச் சோ்ந்த சிலா் அளித்த மனுவில், உறையூா் ராமலிங்க நகா் வீட்டுவசதி கூட்டுறவு சங்கத்தில் 18 போ் சங்கம் நிா்ணயித்த வீட்டுமனைக்கான முழுத் தொகையைக் கட்டியுள்ள நிலையில், 25 ஆண்டுகளாக வீட்டுமனை ஒதுக்கீடு செய்து தரப்படவில்லை. நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் எங்களுக்கு விரைவாக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.