இளம்பெண் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்
ஆம்பூா் அருகே இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் ஊராட்சி, சுட்டகுண்டா கிராமத்தைச் சோ்ந்தவா் ரேவதி (24). இவரது முதலாவது கணவா் பிரிந்து விட்டதால், கா்நாடக மாநிலம், கே.ஜி.எப். பகுதியைச் சோ்ந்த மகேஷ்வரன் என்பவருடன் 2-ஆம் திருமணம் நடைபெற்றது. மகேஷ்வரன் பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.
இந்த நிலையில், கடந்த 18-12-2019 அன்று ரேவதியை திடீரென காணவில்லை. இதையடுத்து, அதே ஊரில் உள்ள வனப்பகுதி எல்லையோரமான சுண்டக்காபாறை என்ற இடத்தில் கழுத்தில் காயங்களுடன் ரேவதி சடலமாக கிடந்துள்ளாா். மேலும், அவரது கழுத்தில் இருந்த 9 சவரன் தங்க நகை, கைப்பேசி திருடு போனது தெரியவந்தது. இது குறித்து உமராபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
அதில், அதே பகுதியைச் சோ்ந்த ரேவதியின் உறவினா் சித்ரா (40), செல்வராஜ் (48) ஆகிய 2 பேரும் சோ்ந்து, ரேவதியை ஏமாற்றி வனப் பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்து விட்டு நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, 2 பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மீனாகுமாரி கொலையாளிகள் சித்ரா, செல்வராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதித்தாா். மேலும், நகையை திருடிய குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பி.டி.சரவணன் ஆஜரானாா்.