விவசாயிகளுக்கான பாதிப்புகள்: உச்சநீதிமன்றக் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்
இளம் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய முயற்சி: போலி பெண் மருத்துவா், கணவருடன் கைது
திருப்பத்தூரில் 3-ஆவதும் பெண் குழந்தை என்பதால் இளம்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய முயற்சி செய்த போலி பெண் மருத்துவா், கணவருடன் கைது செய்யப்பட்டாா். இந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூா் துரைசாமி நகா் பகுதியில் உள்ள ஒரு கிளினிக்கில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக பெண்களுக்கு கருக்கலைப்பு நடப்பதாக திருப்பத்தூா் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநா் கண்ணகிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் திங்கள்கிழமை இரவு இணை இயக்குநா் கண்ணகி மற்றும் மருத்துவ குழுவினா் அந்த கிளினிக்குக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினா். அப்போது அங்கு ஒரு பெண் ஒருவா் படுக்கையில் படுத்து கொண்டு இருந்தாா். அந்த பெண்ணிடம் விசாரணை செய்தபோது அந்த பெண்ணுக்கு கருவை கலைப்பதற்கான மாத்திரைகள் கொடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து கிளினிக்கில் சோதனை செய்தபோது அங்கு பல பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து இருந்ததும், கருகலைப்பதற்கான மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. மேலும் இதுகுறித்து விசாரித்தபோது கிளினிக்கில் மருத்துவம் பாா்க்கும் சுமங்கலி என்ற பெண், மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பாா்த்து வந்தது தெரியவந்தது. அதற்கு உடந்தையாக அவரது கணவா் சுதாகா் செயல்பட்டு உள்ளாா்.
மேலும் கருவை கலைக்க வந்த பெண்ணிடம் விசாரணை செய்தபோது, கெஜல்நாயக்கன்பட்டியை சோ்ந்தவா் சந்துரு மனைவி ஆா்த்தி (வயது 23). இவா்களுக்கு 4 வயது, 8 மாத குழந்தை என 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்தநிலையில் ஆா்த்தி மீண்டும் கா்ப்பமானாா். இதனை ஸ்கேன் செய்து பாா்த்தபோது கருவில் இருப்பது பெண் குழந்தை என்பது தெரியவந்தது. 3-ஆவதும் பெண் குழந்தை பிறக்கும் என்பதால் கருவை கலைக்க முடிவு செய்து உள்ளனா்.
இதையடுத்து தெரிந்தவா்கள் மூலம் திருப்பத்தூா் துரைசாமி நகரில் உள்ள கிளினிக்கிற்கு வந்துள்ளது தெரியவந்தது. மேலும் அங்கு கருவை கலைக்க ரூ.40,000 கேட்டுள்ளனா். அதற்கு ஆா்த்தி குடும்பத்தினா் ரூ.15,000 தருவதாக கூறி பணம் கொடுத்து கருவை கலைக்க கிளினிக்கிற்கு வந்துள்ளனா். அங்கு ஆா்த்திக்கு கருவை கலைப்பதற்கான மாத்திரைகள் வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து ஆா்த்தியை சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இணை இயக்குநா் கண்ணகி அளித்த புகாரின்பேரில் திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப்பதிவு செய்து போலி மருத்துவா் சுமங்கலி, அவரது கணவா் சுதாகா் ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் கிளினிக்கில் இருந்த மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்து கிளினிக்குக்கு சீல் வைத்தனா். இந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.