ஈரோடு: ரூ.5 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தை; தாய் உட்பட 9 பேர் கைது... நடந்தது என்ன?
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நித்யா (28). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டுக்கு வந்த நித்யா, பேருந்து நிலையம் அருகே தங்கி வேலை செய்து வந்துள்ளார். அப்போது, சந்தோஷ்குமார் என்பவருடன் நித்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சந்தோஷ்குமார் மூலம் ஈரோட்டில் பாலியல் தொழில் இடைத்தரகரான செல்வி என்பவரின் அறிமுகம் நித்யாவுக்கு கிடைத்துள்ளது. சந்தோஷ்குமாரும், நித்யாவும் நெருங்கிப் பழகி வந்த நிலையில் நித்யா கர்ப்பம் அடைந்துள்ளார்.
தான் கர்ப்பம் அடைந்ததை செல்வியிடம் நித்யா தெரிவித்துள்ளார். இதையடுத்து, கர்ப்பத்தை கலைக்க ஈரோட்டில் உள்ள பல தனியார் மருத்துவமனைகளை செல்வியின் உதவியுடன் நித்யா அணுகியுள்ளார். ஆனால், போதிய ஆவணங்கள் இல்லாததால் நித்யாவின் கருவைக் கலைக்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், குழந்தை பிறந்தால் அதை நல்ல விலைக்கு விற்றுவிடலாம் என சந்தோஷ்குமாரும், செல்வியும் நித்யாவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். இதற்கு நித்யா சம்மதம் தெரிவித்து கருவைக் கலைக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் ஈரோடு அரசு மருத்துவமனையில் நித்யாவுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, குழந்தையை விற்கும் முயற்சியில் சந்தோஷ்குமார், செல்வி மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த பாலியல் புரோக்கர்களான ராதாமணி, பானு, ரேவதி ஆகியோர் டீமாக இணைந்து செயல்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத நாகர்கோவிலைச் சேர்ந்த தம்பதியை தொடர்பு கொண்டுள்ளனர். குழந்தைக்கு ரூ.10 லட்சம் வரை பேரம் பேசி உள்ளனர். இறுதியாக ரூ.4 லட்சத்துக்கு குழந்தையை தீபாவளிக்கு முந்தைய நாள் நாகர்கோவிலைச் சேர்ந்த தம்பதியிடம் விற்பனை செய்துள்ளனர். அந்த தொகையை 6 பேரும் பங்கு போட்ட நிலையில், தனக்கு கூடுதலாக பணம் வேண்டுமென குழந்தையின் தாய் நித்யா கூறியுள்ளார். அதில், சந்தோஷ்குமார், செல்வி மற்றும் நித்யாவுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த நித்யா தனக்கு பிரசவம் பார்த்த ஈரோடு அரசு மருத்துவமனை செவிலியரிடம் குழந்தையை விற்பனை செய்த விவரத்தை கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியான செவிலியர், மாவட்ட குழந்தைகள் நலப் பிரிவுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குழந்தைகள் நல அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் ஈரோடு வடக்கு போலீஸார் நித்யாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதியானதால் சந்தோஷ்குமார், இடைத்தரகர்களான செல்வி, ராதாமணி, பானு, ரேவதி ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். உடல்நலக் குறைவாக இருந்த நித்யா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் ரேவதி அவருடைய கணவர் கணேசன் என்பவர் மூலம் குழந்தை இல்லாத நாகர்கோவிலைச் சேர்ந்த அகிலாராணி, ஜெயச்சந்திரன் தம்பதிக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டது தெரியவந்தது. இதற்காக அகிலாராணி, ஜெயச்சந்திரன் தம்பதிக்கு வாட்ஸ்அப் மூலம் குழந்தையின் புகைப்படம் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், பேரம் பேசப்பட்டு ரூ.5 லட்சத்துக்கு அக்குழந்தை விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, சட்டவிரோதமாக குழந்தையை வாங்கிய நாகர்கோவில் தம்பதியான அகிலாராணி, ஜெயச்சந்திரன் மற்றும் இடைத்தரகரான ஜெயபாலன், குழந்தையின் தாய் நித்யா ஆகிய நான்கு பேரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
குழந்தையை விலைக்கு வாங்கிய ஜெயச்சந்திரன் அகிலா ராணி தம்பதியினருக்கு கடந்த 15 வருடங்களாக குழந்தை இல்லை என்றும், இதற்காக பல்வேறு முயற்சிகள் செய்தத போதிலும் பலனளிக்காமல் போனது என்பதால் குழந்தையை வாங்கியது தெரியவந்தது. மேலும், ஜெயச்சந்திரன் சிங்கப்பூரில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருவதாகவும், விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த நிலையில் இந்தக் குழந்தையை சட்டவிரோதமாக வாங்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.