ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு: சிவாஜி சமூகநலப்பேரவை இரங்கல்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனிப்பட்ட முறையில் என்னுடன் பழகிவந்தவர்.
நடிகர்திலகம் சிவாஜியின் பரிந்துரையால் 1984 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரானவர் ஈவிகேஎஸ் அந்த நன்றியை மறவாமல், நான் நடிகர்திலகம் சிவாஜிக்கு என்றும் நன்றிக்கடன்பட்டவன் என்று தவறாமல் குறிப்பிடுவார். பெருந்தலைவர் காமராஜரும், நடிகர்திலகம் சிவாஜியும்தான் தமிழக காங்கிரசின் தூணாக விளங்கியவர்கள் எல்லா கூட்டங்களிலும் கூறுவார்.
சிவாஜி போலவே வெளிப்படையாகப் பேசுபவர். ஆனால், விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல், காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விமர்சிப்பவர்களை, கடுமையாகத் தாக்கிப் பேசத் தயங்காதவர். அதற்காக பல அவதூறு வழக்குகளை சந்தித்தவர்.
இதையும் படிக்க |ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த வந்த அரசியல் பாதை !
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக, மத்திய அமைச்சராகப் பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்பட்டார். தொண்டர்களை அரவணைக்கும் தலைவராக, காங்கிரஸ் கட்சிக்கு சோதனை ஏற்பட்டபோதெல்லாம் கட்சியை தன்னுடைய அதிரடி செயல்பாடுகளால் தூக்கிநிறுத்தியவர் ஈவிகேஎஸ்
அவரது மறைவிற்கு நடிகர்திலகம் சிவாஜி ரசிகர்களின் சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.