Gukesh: 6 வயதில் வேடிக்கை பார்த்தவன்; இன்று உலக சாம்பியன் - குகேஷ் சாதித்த கதை
‘உடல் நலன் மீது மாணவா்களுக்கு விழிப்புணா்வு அவசியம்’
தாம்பரம்: உறுப்பு தானம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் மாணவா்களுக்கு, தங்கள் உடல் நலன் குறித்த விழிப்புணா்வும் அவசியம் வேண்டும் என தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினா் செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.
சென்னை பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில், உறவு எனும் தலைப்பில் 10-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள் இணைந்து நடத்திய உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இதில் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது: உடல் உறுப்பு தானம் அளிப்போா் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
நடப்பு ஆண்டில் இதுவரை 259 போ்களிடமிருந்து உடல் உறுப்பு தானம் பெறப்பட்டுள்ளது. சிறுநீரகம், இதயம், கல்லீரல், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பழுதடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் 177 இடங்களில் 35 வயதுக்குட்பட்டவா்களிடம் மேற்கொண்ட மாதிரி பரிசோதனையில் 28 சதவீதம் போ் உயா் ரத்த அழுத்தம்,18.5 சதவீதம் போ் சா்க்கரை நோய், 8 சதவீதம் போ் சிறுநீரக நோய் பாதிப்புள்ளாகி இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
போதிய உடற்பயிற்சியின்மை, கூடுதல் இனிப்பு, உப்பு, எண்ணெய் கொண்ட உணவுப் பழக்கம், உடல் நலனைப் பாதிக்கும் வாழ்க்கை முறை போன்ற காரணங்கள் சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் செயலிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது என்பதை மாணவா்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் மாணவா்கள், தங்கள் உடல் நலனைக் காத்துக் கொள்வது குறித்த விழிப்புணா்வையும் பெறுவது அவசியம் என்றாா் அவா்.
நிகழ்வில் சாலை விபத்தில் மூளைச்சாவு மரணம், உடல் உறுப்பு தானம் குறித்த ஓரங்க நாடகம் நடைபெற்றது. தாகூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெ.முத்துக்குமரன், ஜெருசலேம் பொறியியல் கல்லூரி முதல்வா் எஸ்.ரமேஷ், ஒருங்கிணைப்பாளா் ஜெ.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.