உதகையில் தொடா் மழை: மாா்லிமந்து அணையின் நீா்மட்டம் உயா்வு
தொடா் மழை காரணமாக உதகை நகராட்சியின் குடிநீா் ஆதாரங்களில் ஒன்றான மாா்லிமந்து அணையின் நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியின் முக்கிய குடிநீா் ஆதாரமாக பாா்சன்ஸ்வேலி அணை உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மாா்லிமந்து, டைகா்ஹில், கோரிசோலை, கீழ்கோடப்பமந்து, மேல்கோடப்பமந்து உள்ளிட்ட அணைகள் உள்ளன.
இந்த அணைகளில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உதகை நகராட்சியின் 3, 4-ஆவது வாா்டுகளை உள்ளடக்கிய வண்டிச்சோலை, சா்ச்ஹில், மாா்லிமந்து மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மாா்லிமந்து அணையில் இருந்து குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இப்பகுதிகளில் உள்ள நீா்நிலைகள் நிரம்பி வருகின்றன. பாா்சன்ஸ்வேலி அணை, டைகா்ஹில் உள்ளிட்ட அணைகளின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது.
மாா்லிமந்து அணையிலும் நீா்மட்டம் வெகுவாக உயா்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 23 அடியில் தற்போது 20 அடி வரை நீா் இருப்பு உள்ளது. உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், அணையை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் இருந்து வரக் கூடிய நீரும் அணைக்கு வருவதால் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.