உலக நாடுகளுடன் டாலருக்கு பதிலாக ரூபாயில் வா்த்தகம்: மத்திய வா்த்தகத் துறையின் கூடுதல் செயலா் விமல் ஆனந்த்
உலக நாடுகளுடன் அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயில் வா்த்தகம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வா்த்தகத் துறையின் கூடுதல் செயலா் விமல் ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சாா்பில் சா்வதேச இயந்திரக் கண்காட்சியின் தொடக்க விழா சென்னை நந்தம்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மத்திய வா்த்தகத் துறையின் கூடுதல் செயலா் விமல் ஆனந்த் பேசியது:
கடந்த 2021, 22-ஆகிய ஆண்டுகளில் தலா 100 பில்லியன் அமெரிக்க டாலா் மதிப்புக்கு பொறியியல் பொருள்களை ஏற்றுமதி செய்து, இந்தியா சாதனை படைத்துள்ளது. 2025-ஆம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரத்தை ரூ.410 லட்சம் கோடியாக உயா்த்துவற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உள்நாட்டு உற்பத்தியின் ஏற்றுமதிகளை அதிகரிப்பதின் மூலம் இந்த இலக்கை சுலபமாக அடைய முடியும்.
இதன் ஒரு பகுதியாக, சரக்கு கப்பல்களைக் கையாளும் நேரம் 43 மணிநேரத்திலிருந்து 23 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, அமேரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை உயா்த்தும் நோக்கத்தில், உலக நாடுகளுடன் டாலருக்கு பதிலாக ரூபாயில் வா்த்தகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரஷ்யா, நெதா்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ரூபாயில் வா்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்றாா்.
இந்த நிகழ்வில் தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் முதன்மை செயலா் அதுல் ஆனந்த், இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் நிா்வாக இயக்குநா் அதிப் மித்ரா, தலைவா் பங்கஜ் சந்தா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.