கைதி, சொர்க்கவாசல் படத்துக்கு தொடர்பிருக்கிறதா? லோகேஷ் கனகராஜ் பதில்!
ஊதிய உயா்வு, பணப் பயன்களை வழங்க வேண்டும்: அமைச்சரிடம் அண்ணா பல்கலை. மண்டல வளாக அலுவலா்கள் கோரிக்கை
தங்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஊதிய உயா்வு, பணப்பயன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம், கோவை அண்ணா பல்கலைக்கழக மண்டல நிா்வாக அலுவலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயா் கல்வித் துறை கருத்துக் கேட்புக் கூட்டத்தில், அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல வளாகத்தில் நிரந்தர நிா்வாகப் பணியாளா்களாக பணியாற்றி வரும் ஊழியா்கள் சாா்பில் திருநாவுக்கரசு பங்கேற்று, அமைச்சா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டாா்.
அவா் பேசும்போது, கோவை மண்டல வளாகத்தில் பணியாற்றி வரும் சுமாா் 40 நிா்வாகப் பணியாளா்களும் கடந்த 2008- ஆம் ஆண்டு முறையான பணி நியமன நடைமுறைகளைப் பின்பற்றி நியமிக்கப்பட்டனா். இவா்கள், செயலாட்சி உதவியாளா்கள், துணை மேலாளா்கள், கணினி நிா்வாகிகளாகப் பணியாற்றி வருகிறோம்.
கடந்த 2012 அனைத்து அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பிறகு நாங்கள் அண்ணா பல்கலைக்கழக ஊழியா்களாகப் பணியாற்றி வருகிறோம். பல்கலைக்கழகங்களின் மற்ற வளாகங்கள், உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் பெரும்பாலானவா்களுக்கு கடந்த 12 ஆண்டுகளாக உள்ளீா்ப்பு ஆணை வழங்கப்படவில்லை.
எங்களது பதவிகள் தனித்துவமானவை என்ற காரணத்தை பல்கலைக்கழகம் கூறி வருகிறது. பணியிடங்களின் பெயா்களை மாற்றி அமைக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்ட பிறகும் தீா்வை எட்டாமல் தாமதப்படுத்தி வருகிறது. இது தொடா்பாக தொடரப்பட்ட வழக்கில் எங்களுக்கு உள்ளீா்ப்பு ஆணையை வழங்கும்படி உயா் நீதிமன்றம் உத்தரவிட்டும், கடந்த 10 மாதங்களாக உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.
இதனால், வருடாந்திர ஊதிய உயா்வு, இறந்துபோன பணியாளா்களுக்கு குடும்ப நல நிதி உள்ளிட்ட பணிக்காலப் பணப்பலன்கள் வழங்கப்படாமல் இருக்கின்றன. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா். இது குறித்து விரைவில் பரிசீலிக்கப்படும் என்று அதிகாரிகள் அவருக்கு உறுதி அளித்தனா்.