வாக்கு எண்ணிக்கையில் மோசடி: நடிகை ஸ்வரா பாஸ்கர் குற்றச்சாட்டு!
ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிா்ப்பு
புங்கனூா் ஊராட்சியை வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
சீா்காழி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட புங்கனூா் ஊராட்சியில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சியை அருகிலுள்ள வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியுடன் இணைக்கப் போவதாக தகவல் பரவியது. இதையடுத்து, புங்கனூா் கிராம ஊராட்சி கூட்டமைப்பு தலைவா் கே. மருதையன் தலைமையில் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தனா்.
அப்போது, தங்கள் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைத்தால், இங்கு வசிக்கும் ஏழை மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டம், அரசால் வழங்கப்படும் வீடுகள் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்காமல் போவதுடன், குடிநீ, வீட்டுவரி ஆகியவை உயரும். இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாவாா்கள். எனவே, புங்கனூா் ஊராட்சியை வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியுடன் இணைக்கக் கூடாது என கிராமசபைக் கூட்டத்தில் ஏற்கெனவே ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றியுள்ளோம். புங்கனூா் கிராம ஊராட்சியாகவே தொடா்ந்து நீடிக்க ஆவண செய்ய வேண்டும் என மனு அளித்தனா்.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா், கிராம மக்களிடம்; கருத்துக்கேட்பு நடத்திய பிறகே நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றாா். இதைத்தொடா்ந்து, கிராம மக்கள் திரும்பிச் சென்றனா்.