எழுத்தாளர் நரனின் 'வேட்டை நாய்கள்' - பதைபதைக்கும் கதை இனி ஆடியோ புக் வடிவில்! | Vikatan Play
எழுத்தாளர் நரனின் வேட்டை நாய்கள் வாசகர்களால் கொண்டாடப்பட்ட நாவல்.
தூத்துக்குடிப் பின்னணியில் விரிகிறது கதை. பெரிய பர்லாந்து, சின்ன பர்லாந்து சகோதரர்களிடையே ஹார்பரில் யார் கோலோச்சுவது என்பதில் பல ஆண்டுப் பகை. அவர்களும், அவர்களின் விசுவாச அடியாட்கள் இருவரும்தான் பிரதான பாத்திரங்கள். வேட்டை நாய்கள், எஜமானர்களால் பார்த்துப் பார்த்து வளர்க்கப்படுபவை. ஒரு சொடக்கில் எதிரே நிற்கும் ஆளின் கழுத்துக் கண்டத்தின் சதையைக் கவ்வத் தயாராக இருப்பவை. அடியாட்கள் சமுத்திரமும் கொடிமரமும், தங்கள் எஜமானர்களின் சொடக்குக்காகக் காத்திருப்பவர்கள்.
முதல் அத்தியாயமே இரு கொடூரமான கொலைகளுடன் நம்மைப் பதறவைக்கிறது. தூத்துக்குடிக்கே உரித்தான உப்பு வாசத்தைவிட, ரத்தத்தின் வாடை அதிகம் வீசுகிற கதைதான். ஆனால், நம்மை நெகிழவைக்கும், கலங்கவைக்கும் மனிதர்கள் நிறைந்திருக்கும் கதை. ஒரு நாவலின் ஆகச்சிறந்த பலமே அதில் வலம்வரும் கதை மாந்தர்கள்தான். ரோசம்மாள், மரியதாஸ், ஜான், ராம், அமலி, பனிமலர், குரூஸ் என ஒவ்வொருவரின் உணர்வோடும் நாம் கலந்துவிடுகிறோம். அடுத்து அவர்கள் என்ன ஆவார்கள் என்கிற தவிப்பு மேலெழும்பும் சுவாரஸ்யத்துடன் சொல்லப்பட்ட கதை.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்நாவல் முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம், மனிதர்களின் கலவையான உணர்வுகளை, அவற்றுக்கான நியாயங்களோடு சம்பவங்களாக விவரித்திருப்பது. அந்தச் சம்பவங்கள் நம் கண்முன் திரைப்படக் காட்சிகள்போல் நீள்வதும், ஒரு பொட்டுக்கூட நம்மைச் சோர்வடையச் செய்யாமலிருப்பதும் நாவலின் பெரும் பலம்.
வாசகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட இலக்கிய உலகத்தில் பாராட்டுகளைப் பெற்ற இந்த நாவல் தற்போது ஆடியோ வடிவிலும் கிடைக்கிறது. விகடன் செயலியில் நீங்கள் எங்கிருந்தாலும் எவ்வித சிக்கலும் இன்றி கேட்கலாம். கீழே கொடுக்கப்பட்ட லின்கை க்ளிக் செய்து நரனின் நிழலுலகுக்குள் நுழையுங்கள்!
வேட்டை நாய்கள் ஆடியோ புக்:
https://www.vikatan.com/audio-book/195401/literature/2024/11/21/vettai-naigal-episode-01