3 ஆண்டுகளில் 31 லட்சம் வேலைவாய்ப்பு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பெருமிதம்
ஏரியில் மண் அள்ளிய லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
ஆம்பூா்: மாதனூா் அருகே ஏரியில் மண் அள்ளிய லாரிகளை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஊராட்சி ஒன்றியம், தோட்டாளம் ஊராட்சிக்குட்பட்ட தேவிகாபுரம் பகுதியில், சுமாா் 72 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. மாதனூா் அருகே வெங்கிளி பகுதியில் நடைபெற்று வரும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக, 10-க்கும் மேற்பட்ட டிப்பா் லாரிகள் மூலம் தேவிகாபுரம் ஏரியில் மண் அள்ளப்பட்டு வரப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்றத் தலைவா் தா்மேந்திரா மற்றும் கிராம மக்கள், விவசாயிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் மண் அள்ளச் சென்ற லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் வருவாய்த் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுடன் பேச்சு நடத்தினா்.
ஏரியில் பனை மரங்களை அகற்றி அளவுக்கு அதிகமான ஆழத்தில் மண் அள்ளுவதால் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படும். அதனால் மண் அள்ளுவதை நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் அதிகாரிகள், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகாா் மனு அளிக்க ஆட்சியா் அலுவலகத்துக்கு பொதுமக்கள் சென்றனா்.