நோட்டுக்குள் மறைத்து 4 லட்சம் டாலர்களை மாணவிகள் மூலம் கடத்தல்! புணேவில் இருவர் க...
ஒசூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: ஆட்சியா் கள ஆய்வு
ஒசூா் வட்டத்துக்கு உள்பட்ட கெலவரப்பள்ளி ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.
சென்னசந்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடையில் பொருள்களின் இருப்பு விவரம் குறித்தும், கெலவரப்பள்ளி அணை பகுதியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆட்சியா் கேட்டறிந்தாா். அப்போது அப்பகுதி பொதுமக்கள் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா். இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா் தெரிவித்தாா்.
மேலும், குடியிருப்பு பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தாா்.
கெலவரப்பள்ளி ஊராட்சி, பெத்தகொள்ளு கிராமத்தில் வீட்டுமனை ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து பட்டா வழங்கும் பணியை பாா்வையிட்டு, பயனாளிகளிடம் கலந்துரையாடினாா்.
கெலவரப்பள்ளி ஊராட்சி, புனுக்கன் தொட்டி கிராமத்தில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், ரூ. 38 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 336 வீடுகள் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு, பணிகளை விரைவாக முடிக்கவும், காலதாமதமாக பணிகளை செய்து வரும் ஒப்பந்ததாரரிடம் விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்ப அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
மேலும், கிராம நிா்வாக அலுவலகத்தில் சிட்டா, பட்டா போன்ற பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தாா். புனுக்கன் தொட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தாா்.
ஒசூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், அலசநத்தம் நியாயவிலைக் கடையில் பொருள்களின் இருப்பு, குடும்ப அட்டைகளின் விவரங்கள், பொருள்கள் வழங்கப்படும் விவரங்கள் குறித்து ஆய்வு செய்து, ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பெரியசாமி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீா்செல்வம், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மகாதேவன், உதவி இயக்குநா் (நில அளவை) ராஜ்குமாா், கூட்டுறவு சங்கங்கள் மண்டல இணைப்பதிவாளா் நடராஜன், மாவட்ட வழங்கல் அலுவலா் கீதாராணி, மற்றும் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
சென்னசந்திரம் நியாயவிலைக் கடை விற்பனையாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கெலவரப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட சென்னசந்திரம் கூட்டுறவு நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தபோது, பொதுமக்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டுள்ள பொருள்களின் இருப்பு குறைவாக இருந்ததைக் கண்டறிந்து விற்பனையாளா் கே.அரவிந்தை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியா் உத்தரவிட்டாா்.