ஒடிஸாவில் டிஜிபி மாநாடு நாளை தொடக்கம்- பிரதமா் மோடி பங்கேற்பு
ஒடிஸாவில் அகில இந்திய டிஜிபி-க்கள் மாநாடு வெள்ளிக்கிழமை (நவ.29) தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது. பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா் பங்கேற்கும் இம்மாநாட்டில் உள்நாட்டு பாதுகாப்பு, ஜம்மு-காஷ்மீா் விவகாரம், காலிஸ்தான் பயங்கரவாதம் மற்றும் இணையவழி குற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
2013-ஆம் ஆண்டு வரை தேசிய தலைநகா் தில்லியில் நடைபெற்றுவந்த அகில இந்திய டிஜிபி-க்கள் மாநாடு, மோடி பிரதமராக பதவியேற்ற பின்னா் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நகரங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நடப்பாண்டு ஒடிஸாவின் புவனேசுவரத்தில் நடைபெறும் இம்மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கவுள்ளாா்.
இதில் பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் ஆகியோா் கலந்து கொள்ள உள்ளனா். 250 டிஜிபி மற்றும் ஐஜிபி அதிகாரிகள் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டில், 200-க்கும் மேற்பட்ட பிற காவல்துறை உயரதிகாரிகள் காணொலி வாயிலாக கலந்துகொள்கின்றனா். பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை நிறைவு உரையாற்ற உள்ளாா்.
இம்மாநாட்டில் உள்நாட்டு பாதுகாப்பு, ஜம்மு-காஷ்மீா் விவகாரம், காலிஸ்தான் பயங்கரவாதம் மற்றும் இணையவழி குற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.