கைதி, சொர்க்கவாசல் படத்துக்கு தொடர்பிருக்கிறதா? லோகேஷ் கனகராஜ் பதில்!
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் குஜராத் முருங்கை கிலோ ரூ.260-க்கு விற்பனை
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் குஜராத் முருங்கை கிலோ ரூ.260-க்கு வெள்ளிக்கிழமை விற்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம், அதனைச் சுற்றியுள்ள கப்பல்பட்டி, இடையகோட்டை, மாா்க்கம்பட்டி, ஓடைப்பட்டி, குத்திலுப்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செடி முருங்கை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக இந்தப் பகுதிகளில் முருங்கை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு, ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு முருங்கை வரத்து முற்றிலும் குறைந்தது.
இதனிடையே, முருங்கை சீசன் இந்தப் பகுதியில் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதால் பற்றாக்குறையைப் போக்க குஜராத் மாநிலம், நாசிக் பகுதியில் விளையும் முருங்கைக்காய்கள் ரயில் மூலம் அகமதாபாத்திலிருந்து கோவை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து லாரியில் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வெள்ளிக்கிழமை ஒரு கிலோ குஜராத் முருங்கை ரூ.260-க்கு விற்கப்பட்டது.
சபரிமலை சீசன், திருமணம் உள்ளிட்டவை காரணமாக வரும் நாள்களில் முருங்கை விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.