மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
ஓராண்டில் அனைத்து ரயில் வழித் தடங்களும் மின்மயமாகும் மத்திய ரயில்வே இணை அமைச்சா்
தமிழகத்தில் அடுத்தாண்டுக்குள் அனைத்து ரயில் வழித்தடங்களும் மின்மயமாகும் என்றாா் மத்திய ரயில்வே இணை அமைச்சா் வி. சோமண்ணா.
தஞ்சாவூா் செல்ல விமானம் மூலம் திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவா் மேலும் கூறியது:
புதிய பாம்பன் பாலப் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. பிரதமரிடம் தேதி கேட்டுள்ளோம். சோதனை முடிந்து விரைவில் பாம்பன் பாலம் திறக்கப்படும். மகா கும்பமேளாவை பிரதமரும், உத்தரப் பிரதேச முதல்வரும் வெற்றிகரமாக நடத்தி, வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளனா்.
இந்த விழாவுக்கு லட்சக்கணக்கான பயணிகளைக் கொண்டு வந்து சோ்த்துள்ளது ரயில்வே துறை. அனைத்துத் துறைகளுமே கும்பமேளாவில் சிறப்பாகப் பணியாற்றின. சிலா் புரிதல் இல்லாமல் குறைகூறுகின்றனா்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை எனக் கூறுவது தவறானது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 876 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் கடந்தாண்டு 6,336 கோடியும், நிகழாண்டு ரூ. 6,626 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த காங்கிரஸ் கட்சியில் தமிழகத்தில் 75 கி.மீ. தொலைவுக்குத்தான் புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் பாஜகவின் 10 ஆண்டு ஆட்சியில் 1,300 கி.மீ. மேல் புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன; 2,242 வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன; 687 மேம்பாலங்கள் (ரயில்வே மேம்பாலம், சுரங்கப் பாதை) கட்டப்பட்டுள்ளன; ரூ. 2,950 கோடியில் 77 ரயில் நிலையங்கள் அம்ருத் திட்டத்தில் புனரமைக்கப்பட்டுள்ளன.
நாளொன்றுக்கு 20 ஆயிரம் பயணிகள் வந்து செல்வதைக் கருத்தில் கொண்டு தஞ்சாவூா் ரயில் நிலையமானது ரூ. 12.37 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 94 விழுக்காடு ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. 2026ஆம் ஆண்டுக்குள் 100 விழுக்காடு மின்மயமாக்கப்படும்.
தமிழகத்துக்கு கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அளிக்கப்பட்ட 10 சதவீத திட்டங்களைவிட, பாஜக ஆட்சியில்தான் 100 சதவீத திட்டங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெறும் ரயில்வே திட்டங்கள் அனைத்தும் 2027ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். எனவே தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை என அரசியல் செய்ய வேண்டாம் என்றாா் அவா்.