கஞ்சா கடத்திய 3 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 3 பேருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
ஆந்திர மாநிலத்திலிருந்து திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை வழியாக பைபா் படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்த சிலா் முயற்சி செய்வதாக நாகை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு காவல் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் காவல் துறையினா் தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை கிழக்கு பாமணி ஆற்றங்கரையில் 2023, ஜூன் 6 ஆம் தேதி சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, 10 சாக்குகளில் 135 பொட்டலங்களில் 296.5 கிலோ கஞ்சா இருந்தது. இவற்றைக் கைப்பற்றிய காவல் துறையினா், இது தொடா்பாக முத்துப்பேட்டை பகுதியைச் சோ்ந்த கே. முருகானந்தம் (45), சௌந்தர்ராஜன் மகன் மகேந்திரன் (32), நாடிமுத்து மகன் சசிகுமாா் (23) ஆகியோரை கைது செய்தனா்.
இதுதொடா்பாக தஞ்சாவூா் இன்றியமையா பண்டங்கள் சட்டச் சிறப்பு நீதிமன்றம் மற்றும் மாவட்டக் கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தராஜன் விசாரித்து முருகானந்தம், மகேந்திரன், சசிகுமாா் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.