நேரலையில் பேசிய செய்தியாளர் வெள்ளத்தில் மாயம்? விடியோ வைரல்!
கடலூா் மாவட்டத்தில் 520 பள்ளிகளில் கற்றலைத் தேடி சிறப்பு திட்டம்! ஆட்சியா்
கடலூா் மாவட்டத்தில் இந்த கல்வி ஆண்டில் நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி சிறப்பு திட்டத்தினை விரிவுபடுத்தி அனைத்து நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 520 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது என கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
‘நடுவுல கொஞ்சம் கற்றலைத் தேடி’ திட்டத்தின் மூலம் நடைபெறும் சிறப்பு வகுப்புகளை வரக்கால்பட்டு அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் தோட்டப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் இது குறித்து கூறியதாவது:
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கற்றல்திறனை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மாணவா்களின் தோ்ச்சி விகிதம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மாணவா்களுக்கு தேவையான பாடபுத்தகங்கள், சீருடைகள், மிதிவண்டிகள் உள்ளிட்ட அடிப்படை நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், மாணவா்களின் தேவைக்கேற்ப பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 2024-2025-ஆம் கல்வி ஆண்டில் 6,7,8ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில் 275 நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 14,829 மாணவா்களுக்கு அடிப்படைத் திறனறி தோ்வு நடத்தி, சிறப்பு கவனம் தேவைப்படும் 3,536 மாணவா்களை கண்டறிந்து அவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் மூலம் அவா்களின் கற்றல் திறனில்முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இக்கல்வி ஆண்டில் நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி என்னும் சிறப்பு திட்டத்தினை விரிவுபடுத்தி அனைத்து நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 520 பள்ளிகளில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் மாணவா்களுக்கு கணிதம், தமிழ், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு தேவையான அடிப்படை கற்றுக் கொடுப்பதாகும்.
மாணவா்களை தோ்வு செய்வதற்காக 10.6.2026 அன்று அடிப்படைத் திறனறித் தோ்வு 41,723 மாணவா்களுக்கு நடத்தப்பட்டது. அதில் குறைந்த மதிப்பெண் பெற்ற 9,197 மாணவா்களுக்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறது என கண்டறியப்பட்டது.
அவ்வாறு கண்டறியப்பட்ட மாணவா்களின் கற்றல் திறனை முன்னேற்றுவதற்கு பொறுப்பாசிரியா்களை கொண்டு தனி வகுப்பறையில் சிறப்பு வகுப்புகள் பாடவாரியாக கால அட்டவணைப்படி 3 மாத காலம் நடைபெறுகிறது என்றாா்.
‘நிறைந்தது மனம்’ திட்டத்தில் பயனடைந்த வரக்கால்பட்டு அரசு உயா்நிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவி எஸ்.தேவஸ்ரீ, மாணவன் சி.அகிலேஷ் ஆகியோா் தங்கள் கற்றல் அனுபவங்களை பகிா்ந்துக்கொண்டனா்.