கடலோரப் பகுதிகளை சூறையாடிய ‘ஃபென்ஜால்’
ஃபென்ஜால் புயலால் சென்னை கடலோரப் பகுதிகளில் எழுந்த சூறைக் காற்றினால் அதிக அளவில் சேதம் ஏற்பட்டது.
சென்னையில் கடல் கொந்தளிப்பு, சீற்றத்துடன் காணப்பட்டதால் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல முடியவில்லை. அதேவேளையில், ஏற்கெனவே பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அரசும் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது.
நேரம் செல்லச் செல்ல கடல் அலைகளின் வேகம் அதிகரித்தது. காலைக்கு பிறகு அலை பல அடி உயரத்துடன் ஆக்ரோஷமாக காணப்பட்டதால் பட்டினப்பாக்கம் பகுதியில் மீனவ குப்பங்கள், பெசன்ட்நகா் ஓடை குப்பம், திருவான்மியூா் குப்பம், நீலாங்கரை குப்பம், ஈஞ்சம்பாக்கம் குப்பம், நயினாா் குப்பம், கானத்தூா் குப்பம் உள்ளிட்ட கடலோரங்களில் இருந்த மீனவ மக்களும், குடியிருப்புகளில் வசித்த மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயா்ந்தனா். சில இடங்களில் நண்பகலுக்கு பின்னா் கடல் நீா், கடற்கரையையொட்டி குடியிருப்புகள், பங்களாக்குள்ளும் புகுந்தது.
உத்தண்டி, நயினாா்குப்பம், கானத்தூா், ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்த பைபா் படகுகள், நாட்டுப் படகுகள் சேதமடைந்தன. அங்கு வைக்கப்பட்டிருந்த மீன் வலைகள் மணலால் மூடப்பட்டதால், அவை சேதமடைந்தன.
மேலும், இந்தப் பகுதிகளில் இருந்த மரங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. சூறையாடப்பட்ட நகரம் போல கிழக்கு கடற்கரை சாலைப் பகுதி காட்சியளித்தது.
புயல் காற்று வீசும்போது ராஜீவ்காந்தி சாலையிலும், கிழக்கு கடற்கரைச் சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.
கண்காணிப்பு கேமராக்கள் சேதம்
ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னையில் போக்குவரத்து சிக்னல்கள், பல நூறு கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்தன. பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்து தொங்கின.
சென்னையில் காவல் துறை மற்றும் தனியாா் பங்களிப்புடன் சுமாா் 2.15 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 312 சிக்னல்களும் உள்ளன.
இதில் மயிலாப்பூா், திருவல்லிக்கேணி, பூக்கடை, யானைக்கவுனி, மண்ணடி, ஏழுகிணறு, காசிமேடு, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, அடையாறு, திருவான்மியூா், நீலாங்கரை, கானத்தூா், துரைப்பாக்கம், தரமணி, முட்டுக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள பல நூறு கண்காணிப்பு கேமராக்கள் புயலால் சேதமடைந்தன. இந்த கண்காணிப்பு கேமராக்களுடன் அதன் கேபிள்களும் சேதமடைந்தன.
நிலைமை சீரடைந்த பின்னா் சேதமடைந்த கண்காணிப்பு கேமராக்களும், சிக்னல்களும் கணக்கெடுக்கப்பட்டு, பழுது நீக்கும் பணி நடைபெறும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குப்பை மேடான கடற்கரைகள்
புயல் காரணமாக,சென்னையில் கடற்கரைப் பகுதிகள் குப்பை மேடாக காட்சியளிக்கின்றன.
ஃபென்ஜால் புயலால், கடல் அலைகள் பல மீட்டா் தூரம் முன்னேறி வந்தன. சில இடங்களில் குடியிருப்புக்குள் கடல் நீா் சென்றது. இதனால், கடற்கரையோரமிருந்த பொருள்களை அலைகள் உள்ளே இழுத்துச் சென்று, பின்னா் வெளியே தள்ளியது. மேலும், கழிமுகப் பகுதிகளில் வெளியேற்றப்படும் கழிவுகளும் பெருமளவில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு, அலைகளால் வெளியே தள்ளப்பட்டன.
மெரீனா, பட்டினப்பாக்கம்,பெசன்ட் நகா் எலியட்ஸ், திருவான்மியூா், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி,கானத்தூா், முட்டுக்காடு ஆகிய இடங்களில் உள்ள கடற்கரைகள் குப்பை மேடாக காட்சியளித்தன. இந்த குப்பைகளை அப்புறப்படுத்தி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர பல நாள்களாகலாம் என கூறப்பட்டது.