கடலோர மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: புயல்சின்னம் உருவாவதில் தாமதம்
வங்கக்கடலில் ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்) உருவாகும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அது ஒரு நாள் தாமதமாக திங்கள்கிழமை (டிச.16) உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், டிச.17,18 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இது காற்றழுத்தத் தாழ்வு பகுதியாகஞாயிற்றுக்கிழமை வலுப்பெறும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அது ஒரு நாள் தாமதமாக திங்கள்கிழமை (டிச.16) வலுப்பெறும்.
இது மேலும் வலுப்பெற்று, டிச.18-ஆம் தேதிக்கு மேல் மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும்.
இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (டிச.16) முதல் டிச.21 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை எச்சரிக்கை: இதில், சென்னை தொடங்கி புதுக்கோட்டை வரை உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும், டெல்டாவிலும் டிச.17,18-ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதில் டிச.17-இல் நாகை, திருவாரூா், கடலூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 130 மி.மீ. மழை பதிவானது. மணிமுத்தாறு (திருநெல்வேலி) 100 மி.மீ., கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 90 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.