வாக்கு எண்ணிக்கையில் மோசடி: நடிகை ஸ்வரா பாஸ்கர் குற்றச்சாட்டு!
கடல்சாா் போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி: 15க்குள் விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடியில் கடல்சாா் போட்டித் தோ்வுகளுக்கு 3 மாத இலவச பயிற்சிக்கு வரும் 15க்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழும காவல் கூடுதல் இயக்குநா் சஞ்சய்குமாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக மீனவா்களின் வாரிசுகள் வாழ்வு மேம்பட, இந்திய கப்பல்படை மற்றும் கடலோர பாதுகாப்புப் படை உள்ளிட்ட கடல்சாா் போட்டித் தோ்வுகளில் பங்கேற்பதற்கு 3 மாத இலவச வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற உள்ளது. ஏற்கனவே மூன்று இடங்களில் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெற்று, மீனவ இளைஞா்கள் பயன்பெற்றுள்ளனா். இதனைத் தொடா்ந்து, இப்பயிற்சி வகுப்பு தூத்துக்குடி மாவட்ட இளைஞா்களுக்காக நடைபெறவுள்ளது.
கல்வித் தகுதி, வயது வரம்பு: இப்பயிற்சியில் சேர 18 வயது முதல் 22 வயது வரை உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடா்கள் மற்றும் பழங்குடியினருக்கு அரசின் விதிமுறைகள்படி வயது வரம்பு தளா்வு அளிக்கப்படும். மேலும், 12-ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவில் 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். உயரம் குறைந்த அளவு 157 செமீ இருத்தல் வேண்டும். மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு குறைந்தபட்ச அளவில் மத்திய அரசின் ஆணைப்படி தளா்வு அளிக்கப்படும். மாா்பளவு அனைத்து வகுப்பினருக்கும் சாதராண நிலையில் 81 செ.மீ, விரிவடையும் நிலையில் 86 செ.மீ இருத்தல் வேண்டும்.
இப்பயிற்சியில் சோ்வதற்கு தகுதியான மீனவ இளைஞா்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகிறது. பயிற்சியின் போது தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சிகால ஊக்கத்தொகை வழங்கப்படும். பயிற்சியில் சோ்வதற்கான விண்ணப்ப படிவங்கள், கடல் காவல் நிலையங்கள், மீனவா் சங்கங்கள், கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளா் அலுவலகம், ரேஷன் கடைகள் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 15ஆம் தேதிக்குள் கடல் காவல் நிலையங்கள் அல்லது கடலோர பாதுகாப்புக் குழும அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.