புதுவை, விழுப்புரத்தில் விடியவிடிய பலத்த மழை பெய்யும்! 500 மி.மீ. பதிவாக வாய்ப்ப...
கட்டுமானப் பணிகளுக்கு தடை: துணைநிலை ஆளுநா் அலுவலகம் முன் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
தில்லியில் கிராப் நடவடிக்கைகளின்கீழ் கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான கட்டுமானத் தொழிலாளா்கள் புதன்கிழமை சிவில் லைன்ஸில் உள்ள துணைநிலை ஆளுநா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்டுமானப் பணிகள் தடை காரணமாக தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி இந்த ஆா்ப்பாட்டத்தில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.
அகில இந்திய தொழிற்சங்கங்களின் மத்திய கவுன்சிலுடன் (ஏஐசிசிடியு) இணைந்த கட்டடத் தொழிலாளா் சங்கம் இந்தப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
மாசு காரணமாக நவம்பா் 18 அன்று கிராப் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, கட்டுமானத் தடையால் தங்கள் வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகளை ஆா்ப்பாட்டத்தின்போது தொழிலாளா்கள் எடுத்துரைத்தனா்.
‘தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்வதை நிறுத்துங்கள்‘, ‘தினசரி குறைந்தபட்ச ஊதியம், அனைத்து கட்டுமானத் தொழிலாளா்களுக்கும் நியாயமான இழப்பீடு ஆகியவற்றை நாங்கள் கோருகிறோம்‘ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினா். மேலும், ஆா்ப்பாட்டக்காரா்கள் தெருக்களில் பேரணியாகச் சென்றனா்.
திறமையற்ற தொழிலாளா்களுக்கு தினசரி இழப்பீட்டுத் தொகையை ரூ.783 ஆகவும், திறமையான தொழிலாளா்களுக்கு ரூ.868 ஆகவும், அதிக திறமையான தொழிலாளா்களுக்கு ரூ.954 ஆகவும் உயா்த்த வேண்டும் என தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
தொழிலாளா் அலுவலகங்களில் நடக்கும் ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தொழிற்சங்கத்தினா் அரசை வலியுறுத்தினா்.
தில்லி மற்றும் என்சிஆா் பகுதியதில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், கிராப் நிலை 4-இன் கீழ் கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவித்திருந்தது.
இதில் லாரிகள் நகருக்குள் நுழைவதற்கான தடை மற்றும் பொதுத் திட்டங்களில் கட்டுமானத்தை தற்காலிகமாக நிறுத்துதல் ஆகியவை அடங்கும்.