கனமழை ஈரப்பதம்: வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுமி பலி! - அறந்தாங்கியில் சோகம்!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள கொடிவயல் மேலக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், இவரது மனைவி அம்மு, மகன் ஆதிஸ்வரன், மகள் இனியவள் ஆகியோர் ஊரில் வசித்து வந்துள்ளனர். அவர்கள் வசிக்கும் வீடு மண்சுவற்றால் அமைக்கப்பட்ட ஓட்டு வீடு. இந்நிலையில், வழக்கம்போல் மண் சுவரால் கட்டப்பட்ட ஓட்டு வீட்டில் இரவு உறங்கியுள்ளனர். அப்போது, இன்று அதிகாலை 5 மணியளவில் வீட்டின் பக்கவாட்டுச் சுவர் ஈரப்பதத்தின் காரணமாக இடிந்து ஐந்து வயது சிறுமியான இனியவள் மீது விழுந்துள்ளது. உறக்கத்தில் இருந்த அவரது தாயார் எழுந்து மகளை மீட்பதற்குள் இனியவள் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், உயிரிழந்த இனியவளின் உடல் உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக அவர்களது வீட்டின் மண் சுவர் ஈரப்பதமாக இருந்துள்ளது என்றும் அதன் காரணமாகவே சுவர் இடிந்து சிறுமி உயிரிழந்ததாகவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், ‘இந்தப் போகத்தில் சொந்தமாக மாடி வீடு கட்டிவிடுவோம். அதுவரை, இந்த ஓட்டு வீட்டில் இருங்க’ என்று நாராயணன் தன் மனைவியிடம் அடிக்கடி கூறி வந்தாராம். அதன்படி, அந்த வீட்டின் அருகிலேயே புது மாடி வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. ’இன்னும் இரண்டு மாததுக்குள் குடிபோய்விடலாம்’ என்று நாராயணன் சொல்லியிருக்கிறார். ஆனால், அதற்குள் இப்படி அவர்களது மண் சுவற்றிலாலான ஓட்டு வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்து சிறுமி இறந்துள்ள சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.