கனியாமூர் பள்ளி வன்முறை: நீதிமன்றத்தில் 306 பேர் ஆஜர்!
கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி வன்முறை வழக்கு தொடர்பாக, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 306 பேர் இன்று(ஜூலை 19) ஆஜராகினர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி கடந்த 2022 ஜூலை 13-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உறவினா்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஜூலை 17-ஆம் தேதி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், டிஐஜி பிரவின்குமார் அபிநவ்வை வழிமறித்து தாக்கியதுடன் எஸ்.பி.வாகனம் மற்றும் அதிரடிப்படையின் வாகனத்தை சேதப்படுத்தினர்.
பள்ளி வளாகத்திலிருந்த பொருள்கள் சூறையாடப்பட்டதுடன் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. காவல் துறை வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதுதொடர்பாக 53 சிறார்கள் உள்பட 916 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு, இதில் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மாணவி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த வன்முறை, காவல் துறை வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தது, பசு மாடுகளுக்கு துன்புறுத்தல் அளித்தது, அவற்றை ஓட்டிச் சென்றது, சின்னசேலம் பகுதியில் காவல் துறை உயர் அலுவலர்களை வரவிடாமல் தடுத்தது, சில உயர் அலுவலர்களைத் தாக்கியது தொடர்பான வழக்குகளை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.
வன்முறை தொடர்பான வழக்கில் 53 சிறார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவா்கள் மீதான விசாரணை விழுப்புரத்திலுள்ள இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இவ்வழக்கின் விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்ட 306 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த கட்ட விசாரணையை வருகிற செப்டம்பர் 19-ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிக்க: 108 பேரிடம் ரூ.100 கோடி! டிஜிட்டல் கைது மோசடியில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை!