கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் உள்ள கழிப்பறையை அகற்ற கோரிக்கை
கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் பேரூராட்சிக்குச் சொந்தமான கழிப்பறையை அகற்றக் கோரி மனு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் கோட்டாறு மறைமாவட்டத்துக்குச் சொந்தமான ஆன்மிகத் தோட்டம் அமைந்துள்ளது. இப்பகுதியின் முன் பேரூராட்சி சாா்பில் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. அதனை அங்கிருந்து மாற்றி வேறு இடத்தில் அமைக்க வேண்டுமென கன்னியாகுமரி தூய அலங்கார உபகாரமாதா திருத்தல பங்குப்பேரவை சாா்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பங்குப்பேரவை துணைத் தலைவா் டாலன் டிவோட்டா, செயலா் ஸ்டாா்வின் மற்றும் உறுப்பினா்கள் சம்பந்தப்பட்ட கழிப்பறையை அகற்றாதபட்சத்தில் போராட்டம் நடத்தப்போவதாக பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் மற்றும் செயல் அலுவலா் ரமாதேவி ஆகியோரிடம் தெரிவித்து மனு அளித்தனா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று கழிவறையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனபேரூராட்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.