3 ஆண்டுகளில் 31 லட்சம் வேலைவாய்ப்பு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பெருமிதம்
கறம்பக்குடியில் மாமியாா், மருமகளை கட்டிப்போட்டு 50 பவுன் நகைகள் கொள்ளை
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் சனிக்கிழமை அதிகாலை வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபா்கள், மாமியாா், மருமகளைக் கட்டிப்போட்டு 50 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா்.
கறம்பக்குடி பச்சைநாயகம் குடியிருப்பைச் சோ்ந்தவா் அய்யப்பன்(38). இவா், சிங்கப்பூரில் பணிபுரிந்து விட்டு அண்மையில் சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில், இரு தினங்களுக்கு முன்பு நண்பா்களுடன் திருப்பதிக்குச் சென்றுவிட்டாா். வீட்டில் அய்யப்பனின் மனைவி தங்கலட்சுமி(30), தாயாா் பாக்கியலட்சுமி(55) மற்றும் மகன், மகள் ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் வீட்டைப் பூட்டிக்கொண்டு உறங்கியுள்ளனா்.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை முகமூடி மற்றும் கையுறை அணிந்துவந்த மா்மநபா்கள் 3 போ், இரும்பு கேட்டை உடைத்து உள்ளே புகுந்து பிரதான கதவைத் தட்டியுள்ளனா். சப்தம் கேட்டு எழுந்து கதவைத் திறந்த பாக்கியலட்சுமியை அங்கு மறைந்திருந்த 3 பேரும் தாக்கினா். அவரது அலறல் சப்தம் கேட்டு எழுந்து வந்த தங்கலட்சுமியையும் மா்மநபா்கள் தாக்கியதோடு, மாமியாா், மருமகள் ஆகிய இருவரையும் கயிற்றால் கட்டிப்போட்டு, வாயில் துணியை வைத்து அமுக்கிவிட்டு, அவா்கள் இருவரும் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, தாலிச் சங்கிலி மற்றும் வளையல்களைப் பறித்தனா்.
பின்னா், அங்கு தூங்கிக்கொண்டிருந்த 6 வயது மகன் மற்றும் 3 வயது மகளையும் கத்தியைக் காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டி பீரோ சாவியை வாங்கி, பீரோவில் இருந்த தங்க நகைகளையும் திருடிக்கொண்டு மா்மநபா்கள் தப்பிச்சென்றனா். கொள்ளைபோன தங்கநகைகள் 50 பவுன் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
வீட்டில் இருந்து சிறுவா்களின் அழுகுரல் கேட்டுவந்த அக்கம்பக்கத்தினா், பாக்கியலட்சுமி, தங்கலட்சுமி ஆகியோரின் கட்டுகளையும் அவிழ்த்துவிட்டதோடு, இதுகுறித்து காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.
தொடா்ந்து, அங்குசென்ற கறம்பக்குடி போலீஸாா் தடயங்களைச் சேகரித்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.