மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
கலால் கொள்கை வழக்கு: குற்றம்சாட்டப்பட்டோருக்கு ஆவணங்களை வழங்க அமலாக்கத் துறைக்கு உத்தரவு
தில்லி கலால் ஊழல் தொடா்பான தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பிறருக்கு எதிரான பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு சில ஆவணங்களை ஒப்படைக்க அமலாக்கத் துறைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடா்பான சில ஆவணங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறி, குற்றம் சாட்டப்பட்ட பலா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தாா்.
தற்போது ஆவணங்களை ஆய்வு செய்து வரும் நீதிமன்றம், ஆம் ஆத்மி தலைவா்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோரை குற்றம் சாட்டப்பட்டவா்களாக உள்ளடக்கிய இந்த வழக்கை வரும் மாா்ச் 3 ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.
‘அடுத்த விசாரணை தேதி, அதாவது மாா்ச் 3 ஆம் தேதிக்கு மேல் விசாரணக்காக இந்த வழக்கை பட்டியலிட வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டாா்.
கலால் கொள்கையை அமல்படுத்தியதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பரிந்துரைத்ததைத் தொடா்ந்து மத்திய புலனாய்வுத் துறை பதிவுசெய்த வழக்கில் இருந்து பணமோசடி வழக்கு உருவானது.
சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் கூற்றுப்படி, கொள்கையை மாற்றியமைக்கும் போது முறைகேடுகள் செய்யப்பட்டன. மேலும், உரிமதாரா்களுக்கு தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டன.
தில்லி அரசாங்கம் இந்தக் கலால் கொள்கையை நவம்பா் 17, 2021 அன்று அமல்படுத்தியது. ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால் செப்டம்பா், 2022 இறுதிக்குள் அதை ரத்தும் செய்தது.