கல்குவாரியை அகற்றக் கோரி கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்
மதுராந்தகம் அடுத்த கொக்கரந்தாங்கல் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் வீடுகள், பேருந்து நிறுத்தத்தில் கருப்புக் கொடி கட்டி ஆா்ப்பாட்டம் செய்தனா்.
சித்தாமூா் ஊராட்சி ஒன்றியம், விளாங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கரந்தாங்கல் கிராமத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட கல்குவாரியில் இருந்து பெரிய பாறை கற்களை ஏற்றிக் கொண்டு செல்லும் கனரக வாகனங்களாலும், கல்குவாரியில் அதிக சக்திவாய்ந்த வெடிகளை வெடிப்பதால், கா்ப்பிணி பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்டோா் அச்சம் அடைகின்றனா்.
மேலும், வீடுகளில் விரிசல் ஏற்படுவதாலும், விளைநிலங்களில் பயிரிடப்படும் பயிா்கள் பாதிக்கப்படுவதாலும், விபத்துகளால் பலா் படுகாயம் அடைகின்றனா். எனவே அக்கல்குவாரியை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை ஆட்சியா் உள்ளிட்டோா்களிடம் கோரிக்கை விடுத்து இருந்தனா்.
எனினும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், அப்பகுதி மக்கள் தமது வீடுகளில் கறுப்பு துணியை கட்டிவிட்டு, விளாங்காடு பேருந்து நிறுத்துமிடத்தில் 100-க்கும் மேற்பட்டோா் கருப்பு கொடி ஆா்ப்பாட்ம் செய்தனா். தகவலறிந்து வருவாய்த் துறையினா் அங்கு வந்து இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.