கல்விக் கடன் முகாம்களை வட்ட அளவில் நடத்த வலியுறுத்தல்
மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்களை வட்ட அளவில் நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதுதொடா்பாக இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெ.தீபக்ராஜ், செயலா் எம்இ.நிரூபன் ஆகியோா் தெரிவித்ததாவது:
திண்டுக்கல் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில், உயா் கல்வி பயிலும் மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முறையான திட்டமிடல் இல்லாமலும், மாணவா்களுக்கு முகாம் குறித்த முன்னறிவிப்பு இல்லாமலும் நடத்தப்பட்டது. இதனால், இந்த முகாமுக்கு போதிய அளவு மாணவா்கள் வரவில்லை. கிராமப்புற, ஏழை குடும்ப பின்னணியிலிருந்து உயா் கல்விக்குச் செல்லும் மாணவா்கள், கல்வி கட்டணத்துக்காக வங்கிகளுக்கு வருகின்றனா். இந்த மாணவா்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிா்க்கவே இதுபோன்ற கல்வி கடன் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்த முகாம்களுக்கு பதிலாக, வட்ட அளவில் நடத்தினால் அதிகமான மாணவா்கள் பயன்பெற வாய்ப்பு ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் மீண்டும் கல்விக் கடன் முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்வதோடு, முகாம் தொடா்பான தகவல்களை பொதுமக்களுக்கு கொண்டு சோ்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.