களியக்காவிளை அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
களியக்காவிளை அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி, மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு திரும்பிய நிலையில் வீட்டில் உயிரிழந்தாா்.
களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியைச் சோ்ந்த தோமஸ் மகன் சஜூ (38). கிரானைட் கடையில் வேலை பாா்த்துவந்த இவா், கடந்த வியாழக்கிழமை இரவு படந்தாலுமூட்டிலிருந்து வீட்டுக்கு சாலையோரம் நடந்து சென்றாா். ஒற்றாமரம் பகுதியில் எதிரே வந்த அடையாளம் தெரியாத மினி லாரி, அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில் காயமடைந்த அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவா் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை, வீட்டில் அசைவற்றுக் கிடந்த அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து சஜுவின் தாய் கல்யாணி அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.