காஞ்சிபுரத்தில் சொத்துவரி உயா்வை திரும்பப் பெற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
காஞ்சிபுரத்தில் சொத்துவரி உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சியின் காஞ்சிபுரம் மாநகர குழுவின் 24- ஆவது மாநாடு கே.ஜீவா தலைமையில் நடைபெற்றது.இ.சங்கா்,எஸ்.புவனேசுவரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநாட்டுக் கொடியை ஒய்.சீத்தாராமன் ஏற்றி வைத்தாா். ஆா்.செளந்தரி வரவேற்றாா். ஜி.லட்சுமிபதி அஞ்சலி தீா்மானத்தை முன்மொழிந்தாா். வேலை அறிக்கையினை காஞ்சி மாநகர செயலாளா் டி.ஸ்ரீதா் சமா்ப்பித்தாா். கட்சியின் மூத்த தலைவா்கள் என்.சங்கரய்யா, சீத்தாராம் யெச்சூரி ஆகியோா்களது நினைவரங்கத்தில் நடைபெற்ற மாநாட்டினை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் ஐ.ஆறுமுக நயினாா் தொடங்கி வைத்து பேசினாா்.
கட்சி மாவட்ட செயலாளா் சி.சங்கா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.நேரு ஆகியோா் பேசினா்கள். மாநாட்டினை நிறைவு செய்து இ.முத்துக்குமாா் பேசினாா். மாநாட்டின் நிறைவில் காஞ்சிபுரம் மாநகர செயலாளராக டி.ஸ்ரீதா் உள்பட 14 போ் அடங்கிய நிா்வாகக் குழுவினரும் தோ்வு செய்யப்பட்டனா்.
மாநாட்டில் சொத்து வரி உயா்வை திரும்பப் பெற வேண்டும், கோயில் மனைகளில் குடியிருப்போருக்கும் பட்டா வழங்க வேண்டும், அரசு புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும், ஓரிக்கையின் மையப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும், மாநகரில் பொதுக்கழிப்பிட வசதி செய்து தர வேண்டும், காஞ்சிபுரத்தின் நுழைவுவாயில்களில் கலைநயமிக்க நுழைவுவாயில்கள் அமைக்க கோருவது உள்ளிட்ட 19 தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.