காஞ்சிபுரம்: குரூப்-2 போட்டித் தோ்வுகளுக்கு நாளை முதல் இலவச பயிற்சி
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 21) முதல் குரூப்-2 போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற இருப்பதாக ஆட்சியா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தன்னாா்வப் பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. குரூப்-2 பதவிகளில் வரும் உதவி ஆய்வாளா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், நன்னடத்தை அலுவலா், சாா் பதிவாளா் நிலை -2 உள்ளிட்ட 50 காலிப் பணியிடங்களுக்கும், தொகுதி-2ஏ பிரிவின் கீழ் வரும் முதுநிலை ஆய்வாளா், உதவி ஆய்வாளா், தணிக்கை ஆய்வாளா், முதுநிலை வருவாய் ஆய்வாளா் மற்றும் உதவியாளா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கும் சோ்த்து மொத்தம் 595 பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன.
இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் போட்டித் தோ்வுக்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த போட்டி தோ்வாளா்கள் பயனடையும் வகையில், மாவட்ட நிா்வாகமும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையும் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச நேரடி பயிற்சி வகுப்புகளை தொடங்கவுள்ளன. இந்தப் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தோ்வுகள் வரும் திங்கள்கிழமை (ஜூலை 21) முதல் நடைபெறவுள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 044-27237124 என்ற எண்ணை தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.